சிப்காட் திட்டத்தை கைவிடகோரிவிவசாயிகள் பால்குட ஊர்வலம்நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது


சிப்காட் திட்டத்தை கைவிடகோரிவிவசாயிகள் பால்குட ஊர்வலம்நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது
x
தினத்தந்தி 20 May 2023 7:00 PM GMT (Updated: 20 May 2023 7:00 PM GMT)
நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து என்.புதுப்பட்டி, வளையப்பட்டி, அரூர், பரளி, லத்துவாடி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து சர்வே பணிகளை தொடங்கி உள்ளனர். ஆனால் அப்பகுதி விவசாயிகள், சிப்காட் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சிப்காட் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி முட்டியிட்டு ஆர்ப்பாட்டம், கறவைமாடு ஒப்படைப்பு, மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று சிப்காட் திட்டத்தை கைவிடகோரி, தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 108 லிட்டர் பால்குட அபிஷேக நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதையொட்டி சிப்காட் எதிர்ப்பு குழுவினர் பால்குடங்களுடன் வளையப்பட்டி குன்னிமரத்தான் கோவிலில் இருந்து புறப்பட்டு, என்.புதுப்பட்டி, லத்துவாடி வழியாக நாமக்கல் உழவர் சந்தை வந்தனர். அங்கிருந்து பால்குட ஊர்வலம் ஆஞ்சநேயர் கோவில் வரை நடந்தது. பின்னர் ஆஞ்சநேயருக்கு 108 லிட்டர் பால் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன், சிப்காட் எதிர்ப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ராம்குமார், கொ.ம.தே.க. மோகனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார், விவசாய அணி அமைப்பாளர் பரமசிவம் உள்பட விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story