கண்மாய் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பால் 7 கிராம விவசாயிகள் பாதிப்பு


கண்மாய் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பால் 7 கிராம விவசாயிகள் பாதிப்பு
x
தினத்தந்தி 9 Jun 2023 6:45 PM GMT (Updated: 10 Jun 2023 9:44 AM GMT)

இளையான்குடி அருகே கண்மாய் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பால் 7 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிவகங்கை

இளையான்குடி அருகே கண்மாய் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பால் 7 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கண்மாய்

இளையான்குடி அருகே உள்ள குமாரக்குறிச்சி, காந்திநகர், பெருமச்சேரி, மலையான் குடியிருப்பு, எமனேசுவரம் சுந்தரனேந்தல், ரெகுநாதமடை ஆகிய கிராமங்களை சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். பிரிக்கப்படாத ராமநாதபுரம் மாவட்டத்தில் (எமனேசுவரம்) குமாரக்குறிச்சி கண்மாய் 3-வது பெரிய கண்மாய் ஆகும். 5000 ஏக்கர் விவசாய நிலங்களில் அப்பகுதி விவசாயிகள் கடந்த பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகின்றனர். வானம் பார்த்த பூமியான இப்பகுதியில் வைகை நதியின் நீர் பாசனத்தை நம்பியே விவசாயிகள் விவசாயம் செய்கின்றனர்.

வைகை கால்வாய் வழியாக வரக்கூடிய நீர் வழி தடங்களை மறைத்து உயர்ந்த கட்டிடங்களை கட்டியதால் கால்வாய் பகுதி மேடாகி கண்மாய்க்கு வரக்கூடிய நீர்வரத்து சரிவர வராமல் தடுத்து வருவதாக 7 கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

ஆக்கிரமிப்பு

இதையடுத்து நீர்ப்பாசன சங்க தலைவர் துரை நாகராஜன், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, கலெக்டர், இளையான்குடி தாசில்தார், பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை தலைமை பொறியாளர்கள் மற்றும் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு விவசாயிகள் சார்பாக புகார் மனு அளித்தார். அந்த மனுவில், எமனேசுவரம் கண்மாய் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள பட்டா நிலங்களில் புதிய வீடுகள், குடியிருப்புகள் கட்டி வருகின்றனர். விவசாயம் செய்யக்கூடிய நஞ்சை நிலங்களை அழித்து வீட்டு மனை பட்டாக்களாக விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் கண்மாயின் நீர்வரத்து பாதிக்கப்பட்டு ஆக்கிரமிப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. தற்போது கண்மாயின் உள்வாயிலில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. கண்மாயின் நீர் பிடிப்பு எல்லைகளில் தனியார் ஆக்கிரமிப்புகள் செய்துள்ளதால் கண்மாய் நீர் வரத்து, வினியோகம் பாதிக்கும் நிலை உள்ளது.

கோரிக்கை

இதே நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் நீர்ப்பாசனகண்மாய் மற்றும் விவசாய நிலங்கள் பாசன வசதியின்றி பாலைவனமாக மாறும். விவசாயம், குடிநீருக்கு எமனேசுவரம் கண்மாய் நீரை நம்பி வாழும் 7 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் வறட்சியை சந்திக்கும் நிலை உள்ளது. எனவே விவசாயிகள், பொது மக்கள் பாதிக்கப்படாத வகையில் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும், குமாரக்குறிச்சி ஊருணி கரை அருகே உள்ள பிலாத்து வாய்க்கால் மற்றும் அதன் உபரி கீழத்தெரு வாய்க்கால் ஆகியவை தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாதபடி மேடாக காட்சியளிக்கிறது. மேலும் நெடுஞ்சாலைத்துறை சாலையில் மடை மண்ணுக்குள் புதைந்துள்ளது. எனவே புதியமடை கட்டித்தர வேண்டும் எனவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் நீர் பாசன சங்க தலைவர் மற்றும் உறுப்பினர்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story