கலப்பு உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் பாதிப்பு


கலப்பு உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் பாதிப்பு
x
தினத்தந்தி 8 Oct 2022 12:15 AM IST (Updated: 8 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் டியூகாஸ் உரிமம் ரத்து செய்யப்பட்டதால் கலப்பு உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கோயம்புத்தூர்

துடியலூர்

கோவையில் டியூகாஸ் உரிமம் ரத்து செய்யப்பட்டதால் கலப்பு உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கலப்பு உரம் தயாரிப்பு

கோவையை அடுத்த துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா சங்கம் (டியூகாஸ்) இந்தியாவில் 2-வது முன்மாதிரி சங்கமாக பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

பல்வேறு விதமான உரங்களை கலந்து இந்த நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் அசோகா கலப்பு உரம், தமிழகத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட வேளாண் கூட்டுறவு சங்கங்களால் வாங்கப்பட்டு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

தரமாகவும், விலை குறைவாகவும் இருப்பதால் இக்கலப்பு உரங்களுக்கு விவசாயிகளிடம் பெரிதும் வரவேற்பு உள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் ஆண்டுக்கு 2,000 டன் அளவுக்கு உரம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆண்டுக்கு 20 ஆயிரம் டன் கலப்பு உரங்கள் தயாரிக்கும் அளவுக்கு இந்த நிறுவனத்திற்கு உற்பத்தி திறன் இருப்பினும், வேளாண் பல்கலைக்கழகம், வேளாண் துறை பரிந்துரைகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் உரிமத்தின் அடிப்படையில் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர், இதற்கான இலக்கை நிர்ணயம் செய்கிறார்.

டியூகாஸ் உரிமம் ரத்து

இந்த நிலையில் டியூகாஸ் நிறுவனத்தில் கடந்த ஜூலை மாதத்தில் மத்திய அரசின் உரக்கட்டுப்பாடு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது இந்த நிறுவனத்தில் ஒதுக்கீட்ட அளவைவிட கூடுதலாக கொள்முதல் செய்தது தெரியவந்தது. இதனால் டியூகாஸ் நிறுவனத்தின் உர உரிமம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

இதனால் கலப்பு உரத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- டியூகாஸ் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்து 3 மாதங்களுக்கு மேலாகியும், இந்த உரிமம் திரும்ப பெறுவதற்கு தமிழக அரசு முயற்சி செய்து வருவதாக தெரியவில்லை.

இதனால் தமிழகம் முழுவதும் கலப்பு உரம் வாங்கி வந்த 500-க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

8,000 டன் அளவுக்கு கலப்பு உரங்கள் வாங்கி பயனடையும் விவசாயிகள், அதிக விலை கொடுத்து வெளியில் வாங்க வேண்டிய சூழ்நிலை தள்ளப்பட்டுள்ளது.

எனவே இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் உரிமத்தை திரும்ப பெறுவதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு அதிகாரிகள் சிறு தவறுக்கு இது போன்ற உரிமத்தை ரத்து செய்வது முறையல்ல. அதற்கு முறையான நோட்டீஸ் கொடுத்து விளக்கம் கேட்டிருக்கலாம்.

கூடுதல் கொள்முதல்

இதுகுறித்து டியூகாஸ் செயலாளர் கூறுகையில், இந்த நிறுவனத்தில் மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, வேளாண்துறை அளித்த உர ஒதுக்கீட்டு அளவைவிட, கூடுதலாக கொள்முதல் செய்ததன் காரணமாகவே உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பதிவேடுகளில் உள்ள மூலப் பொருட்கள் உரங்களின் இருப்பும், கையிருப்பில் இருந்த உரங்களின் இருப்பும், சரியாக உள்ளது.


Next Story