அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல் இருப்பதால் விவசாயிகள் பாதிப்பு- சசிகலா
விவசாயிகளிடமிருந்து நெல்லை காலதாமதமின்றி கொள்முதல் செய்ய வேண்டுமென சசிகலா தெரிவித்துள்ளார்.
சென்னை,
அரசு நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;
"தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு போதிய அளவு தண்ணீர் இல்லாததால் சம்பா மற்றும் தாளடி சாகுபடிகள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளதாக, விவசாயிகள் சொல்லி வேதனைப்படுகின்றனர். இவ்வாண்டு பருவமழை சரிவர பெய்யாததாலும், திமுக தலைமையிலான அரசு கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு தேவையான உரிய காவிரி நீரை பெற்று தராததாலும், மேட்டூர் அணையில் போதுமான அளவு தண்ணீர் இல்லாத காரணத்தாலும் நெல் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் சொல்லி மிகவும் வேதனைப்படுகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் 175 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் நிலையில், நடப்பு பருவத்தில் இதுவரை 60 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் சொல்லி வேதனைப்படுகிறார்கள்.
அதேபோன்று, நாகப்பட்டினம் மாவட்டத்தில் மொத்தம் 176 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இருக்கும் நிலையில், 47 இடங்களில் மட்டும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வருகின்றன.
திருவாரூர் மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பருவத்திற்காக ஜனவரி முதல் வாரம் மற்றும் ஜனவரி 15 தேதிக்கு பிறகு என இரண்டு பிரிவுகளாக மொத்தம் 525 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் நிலையில், தற்போது இம்மாவட்டத்தில் இதுவரை 375 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
பல இடங்களில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் இன்னும் திறக்கப்படாமல் இருக்கும் சூழலில், விவசாயிகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அறுவடை செய்யப்பட்ட நெல்மூட்டைகளை அந்தந்த பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்று அடுக்கிவைத்து கொண்டு நெல்மூட்டைகளை இரவு,பகலாக பாதுகாத்து வருகின்றனர். அதேபோன்று, ஒரு சில சிறு விவசாயிகள் வேறு வழியின்றி அறுவடை செய்த நெல்லை தங்கள் வீடுகளிலேயே கொட்டிவைத்து கொண்டு திமுக தலைமையிலான அரசு எப்பொழுது கொள்முதல் நிலையங்களை திறந்து தங்கள் நெல்லை எடுப்பார்கள் என்று ஒவ்வொரு நாளும் காத்துக்கிடக்கின்றனர்.
எனவே, திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் விவசாயத்தை காத்திடவும், விவசாயப்பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் தமிழகத்தில் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும் உடனடியாக திறந்து, விவசாயிகளிடமிருந்து நெல் காலதாமதமின்றி கொள்முதல் செய்து தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என திமுக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.