குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம்


குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம்
x

குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம்

நாகப்பட்டினம்

திருமருகல் பகுதியில் குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனவே முறை வைக்காமல் தண்ணீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறுவை சாகுபடி

காவிரி டெல்டா பகுதிகளில் ஜூன் மாதம் குறுவை சாகுபடி பணிகள் தொடங்கும். இந்த ஆண்டு கடந்த ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. ஆழ்குழாய் நீர்ப்பாசன வசதியுள்ள விவசாயிகள் முன்கூட்டியே குறுவை சாகுபடி பணிகளை தொடங்குவது வழக்கம். இதனை முன்பட்ட குறுவை சாகுபடி பணி என விவசாயிகள் அழைப்பர்.

திருமருகல் ஒன்றியத்தில் அம்பல், பொறக்குடி, கணபதிபுரம், சேஷமூலை, ஆலத்தூர், போலகம், பண்டாரவாடை, திருப்புகலூர், மேலப்பூதனூர் உள்ளிட்ட திருமருகல் சுற்றுவட்டார பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பில் குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் மும்முரமாக செய்து வருகின்றனர். மேலப்பூதனூர் உள்ளிட்ட சில இடங்களில் நாற்றங்கால்களில் விடப்பட்டிருந்த நெல் நாற்றுகளை பறித்து நடவு பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

முறை வைக்காமல் தண்ணீர்

ஆழ்குழாய் பாசனத்தை வைத்து விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மும்முரமாக செய்து வருகின்றனர். நாற்று பறித்தல், நடவு நடுவதற்கு வயல்களை சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

குறுவை சாகுபடி பணிகள் தொடங்கியுள்ளதால் மேட்டூர் அணை நீர் பாசனம் மூலம் முறை வைக்காமல் தண்ணீர் வழங்க வேண்டும். சாகுபடிக்கு தேவையான உரம், பூச்சிமருந்து, நுண்ணுயிர் மருந்துகள் உள்ளிட்ட வேளாண் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story