சம்பா சாகுபடிக்காக நிலங்களை தயார் செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரம்


சம்பா சாகுபடிக்காக நிலங்களை தயார் செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரம்
x
தினத்தந்தி 15 Jun 2023 6:45 PM GMT (Updated: 15 Jun 2023 6:46 PM GMT)

காட்டுமன்னார்கோவில் பகுதியில் சம்பா சாகுபடிக்காக நிலங்களை தயார் செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர்

காட்டுமன்னார்கோவில்,

கடலூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி நீர் மூலம் காட்டுமன்னார்கோவில் மற்றும் குமராட்சி பகுதியில் சுமார் 44 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

மேலும் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக கடந்த 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் கல்லணை வழியாக வருகிற 19-ந்தேதி கீழணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கிருந்து திறக்கப்படும் தண்ணீர் வீராணம் ஏரியை வருகிற 21-ந்தேதி வந்தடையும்.

10 நாட்களில் ஏரி நிரம்பும் பட்சத்தில் விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தி பாசனத்துக்காக ஏரியில் இருந்து ஜூலை மாதத்தில் தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எதிரொலியாக காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறுவை சாகுபடி பணிக்காக தற்போது தங்களது விவசாய நிலங்களை டிராக்டர் மூலம் உழுது சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், சம்பா சாகுபடி பணிக்காக நாங்கள் தற்போது எங்களது நிலங்களை சீரமைத்து தயார் செய்து வருகிறோம்.

தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் வருகிற 21-ந்தேதி வீராணம் ஏரிக்கு வரும் என நாங்கள் எதிர்பார்த்து வருகிறோம். தண்ணீர் அதிக அளவில் திறக்கும் சூழ்நிலை உள்ளதால் ஏரி 10 நாட்களில் நிரம்பும். அதன் பின்னர் பாசனத்துக்காக ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். அவ்வாறு திறக்கும்போது, நாங்கள் எங்களது நிலங்களை மீண்டும் உழுது நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு மூலம் சம்பா சாகுபடியை மேற்கொள்ள இருக்கிறோம். மேட்டூர் அணையில் அதிக அளவு தண்ணீர் இருப்பதால், இந்தாண்டு விவசாயத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்ற நம்பிக்கையில் நாங்கள் உள்ளோம் என்றனர்.


Next Story