சாம்பல் பூசணி விலை வீழ்ச்சியால் விவசாயிகளுக்கு ஏமாற்றம்


சாம்பல் பூசணி விலை வீழ்ச்சியால் விவசாயிகளுக்கு ஏமாற்றம்
x
தினத்தந்தி 12 Oct 2023 12:15 AM IST (Updated: 12 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வாணாபுரம் பகுதியில் சாம்பல் பூசணியின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை

வாணாபுரம்

வாணாபுரம் பகுதியில் சாம்பல் பூசணியின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சாம்பல் பூசணி

வாணாபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள் முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த பகுதியாகும். வாணாபுரம் அருகே உள்ள மெய்யூர், அள்ளிக்கொண்டாப்பட்டு, தச்சம்பட்டு, தலையாம்பள்ளம், நாச்சானந்தல் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாம்பல் பூசணியை பயிரிட்டுள்ளனர். கடந்த சில மாதங்கள் வரை இதற்கு நல்ல விலை கிடைத்தது.

ஆனால் எதிர்பார்த்த அளவு இப்போது விலை கிடைக்கவில்லை. கிலோ ரூ.3 முதல் ரூ.5 வரை மட்டுமே விலை போகிறது.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ''காய்கறி பயிர்களோடு சாம்பல் பூசணி காய்களை நாங்கள் அதிகளவில் இப்பகுதிகளில் பயிரிட்டு பராமரித்து வருகிறோம். இந்த நிலையில் நன்றாக செழித்து வளர்ந்து காய்கள் அதிக அளவில் இருந்தும் கிலோ 3 ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரைதான் விலை போகிறது.

மேலும் இந்த காய்கள் பெரும்பாலும் திருஷ்டிக்காக மட்டும் பயன்படுத்தப்படுவதால் சமையலுக்கு இந்த காய்களை இப்பகுதிகளில் பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர்.சாம்பல் பூசணியல் நன்மை அதிக அளவில் இருந்தாலும் இதனை சமையலுக்கு பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து வருகின்றனர்.

நீர்ச்சத்து

இந்த காய் சாப்பிடுவதனால் உடலில் நீர்ச்சத்து அதிகரிப்பது மட்டுமல்லாமல் சிறுநீரக சம்பந்தமான நோய்கள் தடுக்கப்படுகிறது. ஆனால் இதன் மருத்துவ குணத்தை பலர் உணர்வதில்லை.

அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சாலைகளில் உடைக்கும் திருஷ்டி காயாகவே இந்த சாம்பல் பூசணியை பார்க்கின்றனர்.

மேலும் இப்பகுதிகளில் பயிரிடப்படும் இந்த வகையான பூசணிக்காயை பெங்களூரு, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கு டன் கணக்கில் வாங்கி செல்கின்றனர்.

ஆனால் அவர்கள் சொற்ப விலைக்கு வாங்கி செல்வது மிகவும் ஏமாற்றம் அளிப்பது மட்டுமல்லாமல் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை.

எனவே சாம்பல் பூசணி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால் இவற்றை பயிரிடும் விவசாயிகளின் வருமானம் உயரும்'' என்றனர்.


Next Story