வைக்கோல் கட்டு விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி


வைக்கோல் கட்டு விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி
x

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2-ம் போக நெல் சாகுபடி அறுவடை முடிவடைந்த நிலையில் அதிக தேவை காரணமாக வைக்கோல் கட்டு விலை திடீெரன்று உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2-ம் போக நெல் சாகுபடி அறுவடை முடிவடைந்த நிலையில் அதிக தேவை காரணமாக வைக்கோல் கட்டு விலை திடீெரன்று உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

2-ம் போக அறுவடை

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் எக்டரில் நெல் விவசாயம் செய்த விவசாயிகள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் பல பகுதிகளில் பயிர்கள் கருகின. வைகை தண்ணீர் பாயும் பகுதிகளில் நல்ல விளைச்சல் ஏற்பட்டு முதல்போக அறுவடை முடிந்தது. வைகை தண்ணீர் அதிகளவில் வந்து நீர்நிலைகள் நிறைந்ததால் அதனை சுற்றிய பகுதிகளில் 2-ம் போக சாகுபடியை தொடங்கினர்.

இவ்வாறு ராமநாதபுரம் பெரிய கண்மாயை சுற்றி உள்ள பகுதிகள் மற்றும் சத்திரக்குடி, எட்டிவயல், களக்குடி, மேலச்சீத்தை, போகலூர் உள்ளிட்ட பகுதிகளிலும், திருஉத்தரகோசமங்கை செல்லும் வழியில் உள்ள கிராம பகுதிகளிலும் நெற்பயிர் அறுவடை தொடங்கி ஏறத்தாழ முடிவடைந்துவிட்டன. இவ்வாறு அறுவடையின்போது நெற்கதிர்கள் தனியாகவும், வைக்கோல் தனித்தனியாகவும் பிரித்தெடுக்கப்படும். ஈரப்பதம் உள்ள வைக்கோலை விவசாயிகள் வயல்வெளிகளில் உலர வைப்பார்கள்.

இந்த வைக்கோலை விவசாயிகள் சேகரித்து, போர் போட்டு அடைத்து வைத்து, தேவைப்படும்போது கால்நடைகளுக்கு பயன்படுத்துவது தொன்று தொட்டு இருந்து வந்தது. வைக்கோல் போர் வைப்பதற்காகவே விவசாயிகள் தங்களது வீடுகளுக்கு பின்புறம் இடத்தை ஒதுக்கி வைத்து இருப்பார்கள். ஆனால் இன்றைக்கு வைக்கோல் போர்களை பார்ப்பது அரிதாகிவிட்டது. இதற்கேற்ற வேலை செய்ய தற்போது தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. இந்த பிரச்சினைக்கு தீர்வாக வயலில் நெல் அறுவடைக்கு பின் வைக்கோலை சேகரித்து தனியாக எந்திரங்கள் மூலம் சுருட்டி கட்டாக கட்டி அடுக்கி வைக்கின்றனர்.

விலை அதிகரிப்பு

இவ்வாறு ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் அறுவடை முடிந்த வயல்களில் கிடந்த வைக்கோல்களை கட்டாக கட்டும் பணி நடைபெற்று வருகிறது. டிராக்டர் மூலம் இணைக்கப்பட்ட சிறிய எந்திரம் மூலம் வைக்கோலை சுருட்டி கட்டுகளாக கட்டப்படுகின்றன. 2-ம் போக அறுவடை முடிந்த வயல்களில் எல்லாம் வைக்கோல்கள் கட்டுக்கட்டாக கட்டப்பட்டு கிடக்கின்றன. இதனை கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள், வியாபாரிகள் வந்து வைக்கோல்களை விலைக்கு வாங்கி செல்கின்றனர்.

முதல்போக சாகுபடி நடைபெற்ற சமயங்களில் வைக்கோல் கட்டு ரூ.100 முதல் ரூ.120 வரை விலை போனது. மாநிலம் முழுவதும் அறுவடை சமயம் என்பதால் விலை குறைந்து காணப்பட்டது. தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் மட்டும் 2-ம் போக சாகுபடி நடந்து வைக்கோல் குறைவாக கிடைப்பதால் அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. தேவை அதிகரித்துள்ளதால் சிறிய கட்டு ரூ.120 என்றும் பெரிய கட்டு ரூ.160 என்றும் விலை போகிறது. இன்னும் சிலர் கிடைத்தவரை லாபம் என்று கூடுதல் விலைக்கு விற்கின்றனர்.

இந்த வைக்கோல் கட்டுவதற்கு கட்டு ஒன்றுக்கு ரூ.30 வரை விலை கொடுக்க வேண்டி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். திடீர் மவுசு காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கால்நடைகள் வளர்க்கும் உள்ளுர்காரர்கள் தவிர வெளியூர்களில் இருந்தும் வந்து வைக்கோல் வாங்கி செல்கின்றனர். வைகோல் கட்டு விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Related Tags :
Next Story