விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கம்பு வரத்து அதிகரிப்பு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கம்பு வரத்து அதிகரித்து காணப்பட்டது. அதேநேரத்தில் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
சிறுதானிய பயிர்களில் மிகவும் முக்கியமான சத்து மிகுந்த பயிராக கம்பு உள்ளது. தமிழகத்தில் நெல், கோதுமை, சோளத்துக்கு அடுத்தபடியாக பயிரிடப்படும் உணவுப் பயிர் கம்பு ஆகும். கம்பு குறைந்த நீர்வளம், மண்வளம் உள்ள இடங்களிலும் செழித்து வளரக்கூடியவை. உணவு தன்மையிலும் மற்ற தானியங்களை விட அதிகமான சத்துப்பொருட்களை பெற்றுள்ளது. கம்பு தானியமாக மட்டுமல்லாமல் சிறந்த கால்நடை தீவனமாகவும் உள்ளது. அரிசியை மட்டுமே உண்பதால் வரும் சத்து குறைபாட்டை போக்கவும் கம்பு மிகச்சிறந்த தானியமாகும்.
இத்தகைய சத்து மிகுந்த கம்பு பயிரை விழுப்புரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மானாவரியாக விவசாயிகள் சாகுபடி செய்தனர். கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்த மழையினால் அவை நன்கு செழித்து வளர்ந்து கதிர்களுடன் அறுவடைக்கு தயாரானது. கம்பு அமோகமாக விளைச்சல் அடைந்துள்ளதால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், அதனை அறுவடை செய்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.
கம்பு வரத்து அதிகரிப்பு
இதனால் கடந்த சில நாட்களாகவே விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கம்பு வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் நேற்று விழுப்புரம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பலரும், தங்கள் விளைநிலங்களில் செழித்து வளர்ந்திருந்த கம்புகளை அறுவடை செய்து அதனை மூட்டைகளாக கட்டிக்கொண்டு டிராக்டர்கள், சரக்கு வாகனங்கள் மூலம் விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு விற்பனைக்காக கொண்டு வந்தனர். நேற்று 100 கிலோ எடை கொண்ட கம்பு 400 மூட்டைகள் வரை வரத்து இருந்தது.
இவற்றை எடைபோட்டு வியாபாரிகள் பலர் கொள்முதல் செய்தனர். 100 கிலோ எடை கொண்ட நாட்டு கம்பு மூட்டை ஒன்று அதிகபட்சம் ரூ.7,355-க்கும், குறைந்தபட்சம் ரூ.7,200-க்கும் விலைபோனது. அதுபோல் எச்.பி. ரக கம்பு 100 கிலோ எடை கொண்டது மூட்டை ஒன்று ரூ.2,389-க்கு விலைபோனது. நாட்டு கம்பு விலை உயர்ந்து காணப்பட்டதால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.