கம்பு பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்
வாணாபுரம் பகுதிகளில் கம்பு பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்.
வாணாபுரம்
வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் மிக முக்கிய தொழிலாக விளங்கி வருகிறது. இப்பகுதி விவசாயிகள் பெரும்பாலும் ஆண்டு பயிரான மரவள்ளி, கரும்பு உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.
மாற்றுப் பயிராக நெல், கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா, உளுந்து உள்ளிட்ட பயிர்களையும் , பருவகால பயிர்களாக பூக்கள் வகையான பயிர்களையும் காய்கறி வகையான பயிர்களையும் விவசாயிகள் பயிரிடுகின்றனர்.
தற்போது வாணாபுரம், தச்சம்பட்டு, மழுவம்பட்டு, கொட்டையூர், வாழவச்சனூர், அகரம் பள்ளிப்பட்டு, கூடலூர், சேர்ப்பாப்பட்டு, சின்னக்கல்லப்பாடி, பெரியகல்லப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கம்பு பயிரிடப்பட்டு அதனை பராமரித்து வருகின்றனர்.
இந்த கம்பு பயிர்கள் நன்றாக செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பருவ கால பயிரான கம்பு பயிரிட்டு அதனை பராமரித்து வருகிறோம். தற்போது நன்றாக செழித்து வளர்ந்து வரும் நிலையில் குருவிகள் மற்றும் பறவைகளின் தொல்லைகள் அதிகமாக உள்ளது.
அதனை விரட்டுவதில் காலை முதல் மாலை வரை வெகு நேரம் பணி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விளைச்சல் அதிகமாகும் போது விலையும் குறைவாக கிடைக்கிறது.
எனவே அரசு நேரடியாக கம்புகளை கொள்முதல் செய்து தரத்திற்கு ஏற்ற விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றனர்.