பந்தல் காய்கறி சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம்


பந்தல் காய்கறி சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம்
x
தினத்தந்தி 12 Jan 2023 12:15 AM IST (Updated: 12 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பந்தல் காய்கறி சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம்

கோயம்புத்தூர்

நெகமம்

நெகமம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் தென்னை சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. தென்னைக்கு அடுத்தபடியாக காய்கறி விவசாயமே பிரதானமாக உள்ளது. குறிப்பாக தக்காளி, பொரியல் தட்டை, வெங்காயம், கத்தரி மற்றும் பீட்ரூட் போன்ற காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இது தவிர பாகற்காய், பீர்க்கன்காய், சுரைக்காய் உள்ளிட்ட பந்தல் காய்கறி சாகுபடி நடைபெறுகிறது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக விளைநிலங்களில் தோட்டக்கலைத்துறை மானிய திட்டத்தின் கீழ் பந்தல் அமைக்க ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. அதிலும் மகசூல் அதிகம் கிடைப்பதால், பந்தல் காய்கறி சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

ஒருமுறை பந்தல் அமைத்தால் தொடர்ந்து 5 முதல் 7 ஆண்டுகள் வரை பலன் தருகிறது. மகசூலும் கூடுதலாக கிடைக்கிறது. பாகற்காய், சுரைக்காய், புடலங்காய், பீர்க்கன்காய் மற்றும் கோவைக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. பாகற்காய், பீர்க்கன்காய் சாகுபடியில் 10 அடி இடைவெளி விட்டு, மேட்டுப்பாத்திகள் அமைக்க வேண்டும். ஒவ்வொரு கொடிக்கும் 5 அடி இடைவெளியில், ஏக்கருக்கு 4 ஆயிரம் கொடிகள் வரை நடவு செய்யலாம்.

சிறந்த பராமரிப்பு மற்றும் மழை கிடைத்தால் தொடர்ந்து 75 முதல் 90 நாட்கள் வரை காய்ப்பு இருக்கும். ஏக்கருக்கு குறைந்தபட்சம் 20 டன் வரை மகசூல் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story