மத்திய அரசின் நிலக்கரி சுரங்க திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு


மத்திய அரசின் நிலக்கரி சுரங்க திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு
x

மத்திய அரசின் நிலக்கரி சுரங்க திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அரியலூர்

பழுப்பு நிலக்கரி திட்டம்

நாடு முழுவதும் 101 இடங்களில் நிலக்கரி மற்றும் அதன் துணை பொருட்கள் எடுப்பதற்கான அனுமதியை மத்திய அரசு அளித்துள்ளதுடன், அப்பகுதிகளில் நிலக்கரியை தோண்டி எடுப்பதற்கு விருப்பமுள்ள நிறுவனங்களுக்கு மத்திய அரசு சார்பில் அழைப்பாணை(டெண்டர்) விடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 29-ந் தேதி வெளியிடப்பட்டுள்ள இந்த அழைப்பாணையில், தமிழ்நாட்டில் 3 இடங்களில் நிலக்கரி எடுக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

இதில் திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் அருகே உள்ள வடசேரி பழுப்பு நிலக்கரி திட்டம், அரியலூர் மாவட்டத்தில் உடையார்பாளையம் தாலுகா தா.பழூர் அருகே உள்ள மைக்கேல்பட்டி பழுப்பு நிலக்கரி திட்டம், கடலூர் மாவட்டத்தில் சேத்தியாத்தோப்பு பகுதியில் 2 பழுப்பு நிலக்கரி திட்டம் ஆகிய திட்டங்களுக்கு அழைப்பாணை கோரப்பட்டுள்ளது. மேலும் இந்த அழைப்பாணை நடவடிக்கைகளில் நிலக்கரித்துறையில் அனுபவம் இல்லாத புதிய நிறுவனங்களும் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது

சுரங்கம் தோண்டப்பட்டு அதில் இருந்து நிலக்கரியாகவோ அல்லது நிலக்கரியின் பிற வடிவங்களிலோ அவற்றை எடுத்துக்கொள்ள ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் அடிப்படையில் அரியலூர் மாவட்டத்தில் மைக்கேல்பட்டி நிலக்கரி படுகையில் பருக்கல் ஊராட்சியை சேர்ந்த பருக்கல், அழிசுகுடி, வாத்திகுடிகாடு ஆகிய கிராமங்களில் முதல் கட்டமாக 14.8 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நிலக்கரி எடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் மற்றும் செந்துறை வட்டாரங்களில் ஏற்கனவே சுண்ணாம்பு சுரங்கங்கள் அமைக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் துறைகளை சேர்ந்த 7 சிமெண்டு ஆலைகள் இயங்கி வருகின்றன. இதர பகுதிகள் முற்றிலும் விவசாயத்தை நம்பி இருக்கக்கூடிய பகுதிகளாக உள்ளன.

மேலும் இந்த மாவட்டத்தில் திருமானூர் மற்றும் தா.பழூர் வட்டார பகுதிகள் டெல்டா பாசன பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இப்பகுதியில் பிரதான விவசாயமாக நெல், கரும்பு, நிலக்கடலை, முருங்கை, மக்காச்சோளம், எள், உளுந்து, பருத்தி, பணப்பயிராக விளங்கக்கூடிய முந்திரி சாகுபடி ஆகியவை நடைபெற்று வருகின்றன. இதைத்தவிர மலர் சாகுபடி, காய்கறிகள் உற்பத்தி உள்ளிட்ட விவசாய மற்றும் தோட்டக்கலைத்துறை சாகுபடிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்திற்கு தயாராகும் விவசாயிகள்

எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட சுத்தமல்லி அணை, இப்பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கான அடிப்படை காரணமாக விளங்குகிறது. இதன் காரணமாக நிலக்கடலை, முருங்கை, வாழை ஆகியவற்றை சாகுபடி செய்து மூன்று போகமும் விவசாயம் செய்யும் பகுதியாக இப்பகுதி விளங்கி வருகிறது. இந்நிலையில் சுத்தமல்லி அணையில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பருக்கல் ஊராட்சியின் 3 குக்கிராமங்களில் இருந்து மைக்கேல்பட்டி நிலக்கரி திட்டத்திற்கு முதல் கட்ட பணிகளை தொடங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்படும், விவசாயம் அழிந்துபோகக்கூடும் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் நிலக்கரி எடுக்கும் திட்டம் குறித்து தா.பழூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுத்தீ போல் தகவல் பரவி வருகிறது. இப்பகுதியில் விவசாயத்தின் எதிர்காலம் குறித்து கவலை அடைந்துள்ள அவர்கள், தீவிர போராட்டங்களில் களமிறங்க தயாராகி வருகின்றனர். இதுகுறித்த அவர்களது மனநிலை பற்றி காண்போம்.

திட்டத்தை கைவிட வேண்டும்

தமிழ்நாடு விவசாய சங்க பொறுப்பாளர் உலகநாதன்:- தா.பழூர் ஒன்றியம் முழுவதும் விவசாய நிலங்களை கொண்டது. நிலக்கரி திட்டத்திற்கு சுரங்கம் அமைக்கும்போது இப்பகுதியில் நிலத்தடி நீர் முற்றிலும் இல்லாமல் போய்விடும். சுமார் 40 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்திற்கு நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு அதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். ஏற்கனவே அரியலூர் செந்துறை பகுதிகளில் தங்கள் விளை நிலங்களை சுண்ணாம்பு சுரங்கங்களுக்கு கொடுத்தவர்கள் அப்பகுதியில் வாழ்வாதாரத்தை இழந்து, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தினக்கூலிகளாக வேலை செய்து வருகின்றனர். அதோடு அவர்களது மனைவிகள் அரியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கூலி தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். நாட்டின் கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்துவது அரசின் கடமைதான். அதேநேரம் அப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் எந்த வளர்ச்சி திட்டத்தையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம். மத்திய அரசு உடனடியாக இப்பகுதி விவசாயிகளை பாதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். தேவைப்பட்டால் கடுமையான போராட்டங்களுக்கு தயாராக உள்ளோம்.

பேரிடியாக உள்ளது

சுத்தமல்லியை சேர்ந்த விவசாயி சக்திவேல்:- சுத்தமல்லி அணை அமைப்பதற்கு முன்பு இப்பகுதி கடுமையான வறட்சியான பூமியாக இருந்தது. சுத்தமல்லி அணை அமைக்கப்பட்ட பிறகு எங்கள் வாழ்வாதாரம் மேம்பட்டு தற்போது மூன்று போகமும் விவசாயம் செய்து வருகிறோம். கடுமையான வறுமையின் பிடியில் இருந்த நாங்கள், ஓரளவிற்கு எங்களுக்கான வாழ்க்கையை பார்த்துக் கொள்ளக்கூடிய பொருளாதார சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் இப்போது மத்திய அரசின் இந்த அறிவிப்பு எங்கள் வாழ்க்கையில் பேரிடியாக அமைந்திருக்கிறது. இதன்மூலம் இப்பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து விடும் அபாயம் உள்ளது. எங்கள் விவசாய நிலங்களை எந்த காரணத்திற்காகவும் நாங்கள் விட்டுத்தர மாட்டோம். எங்களை கட்டாயப்படுத்தி நிலம் கையகப்படுத்தப்பட்டால் நாங்கள் கடுமையான போராட்டத்தில் இறங்குவோம்.


Next Story