அம்மாபேட்டை அருகே பரபரப்பு கோவில் விவசாய நிலங்கள் குத்தகை உயர்வுக்கு விவசாயிகள் எதிர்ப்பு


அம்மாபேட்டை அருகே பரபரப்பு கோவில் விவசாய நிலங்கள் குத்தகை உயர்வுக்கு விவசாயிகள் எதிர்ப்பு
x

அம்மாபேட்டை அருகே கோவில் விவசாய நிலங்கள் குத்தகை உயர்வுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு

அம்மாபேட்டை

அம்மாபேட்டை அருகே கோவில் விவசாய நிலங்கள் குத்தகை உயர்வுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஏலம்

அம்மாபேட்டை அருகே உள்ள பட்லூர் வாகீஸ்வரர், விநாயகர், மாரியம்மன் கரிய காளியம்மன், சென்னம்பட்டி மாரியம்மன் கோவில்களுக்கு சொந்தமான விவசாய நிலங்கள் 5 ஆண்டுக்கு ஒரு முறை இந்து சமய அறநிலையத்துறையால் குத்தகைக்கு விடப்படும்.

அதன்படி இந்த ஆண்டு ஏலம் வாகீஸ்வரர் கோவில் வளாகத்தில் நடந்தது. இந்த ஆண்டு ஏல தொகையில் 15 சதவீதம் வரை உயர்த்தி விவசாயிகள் செலுத்த வேண்டும் என்ற விதிமுறையை விவசாயிகளிடம் அதிகாரிகள் தெரிவித்து ஏலத்தை தொடங்கினர்.

எதிர்ப்பு

அந்தியூர் சரக ஆய்வாளர் மாணிக்கம் முன்னிலையில், தக்கார் ஸ்ரீதர், நந்தினீஸ்வரி ஆகியோரால் பகிரங்க ஏலம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட விவசாயிகள், 15 சதவீத ஏலத்தொகை உயர்வுக்கு அதிகாரிகளிடம் எதிர்ப்பு தெரிவித்து பேசினர். அப்போது அதிகாரிகளிடம் விவசாயிகள் கூறுகையில், 'ஆண்டுக்கு ஒரு முறை 15 சதவீதம் உயர்வு என்றால் 5 ஆண்டுகளில் 75 சதவீதம் உயர்ந்து விடுகிறது. இது கிட்டத்தட்ட 100 சதவீதம் உயர்த்தி செலுத்த வேண்டிய தொகையாக உள்ளது. ஏற்கனவே தரிசு உள்ள நிலங்களில், வானம் பார்த்த நிலங்களில்தான் நாங்கள் பயிரிட்டு வருகிறோம். மழை பெய்தால் மட்டுமே நாங்கள் விவசாயம் செய்ய முடியும். ஏற்கனவே விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதில் 15 சதவீத உயர்வு என்பது ஏற்கத்தக்கதல்ல. எனவே இதை குறைத்து விவசாயிகளின் விருப்பத்துக்கு ஏற்றவாறு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்,' என்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சமாதானம்

அரசின் விதிமுறைகள் பற்றி விவசாயிகளிடம் அதிகாரிகள் விளக்கி பேசினர். இதில் விவசாயிகள் சமாதானம் அடைந்து ஏலத்தில் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து பட்லூர் கரிய காளியம்மன் கோவிலின் 7.20 ஏக்கர் விவசாய நிலங்கள் ரூ.14 ஆயிரத்துக்கும், வாகீஸ்வரர் கோவிலின் 29.48 ஏக்கர் விவசாய நிலங்கள் ரூ.81 ஆயிரத்து 300-க்கும், விநாயகர், மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 4.29 ஏக்கர் விவசாய நிலங்கள் ரூ.7 ஆயிரத்து 300-க்கும், சென்னம்பட்டி முரளி மாரியம்மன் கோவிலின் 8.04 ஏக்கர் விவசாய நிலங்கள் ரூ.10 ஆயிரத்துக்கும், சென்றாய பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 10.08 ஏக்கர் விவசாய நிலங்கள் ரூ.32 ஆயிரத்து 275-க்கும் ஏலம் போனது.


Next Story