ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை மூடிய அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் நூதன போராட்டம்


ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை மூடிய அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 21 Nov 2022 6:45 PM GMT (Updated: 21 Nov 2022 6:45 PM GMT)

இ-நாம் திட்டத்துக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை மூடிய அதிகாரிகளை கண்டிக்கும் விதமாக, அவர்களுக்கு பாராட்டு விழா நடத்த வந்த விவசாயிகளின் நூதன போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைகூடத்தில் விவசாயிகள் எடுத்து வரும் நெல் உள்ளிட்ட தானியங்களை இ-நாம் திட்டத்தில், அதாவது மின்னணு ஏல முறையில் கொள்முதல் செய்திட வேண்டும் என்று வியாபாரிகளிடம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த முறைக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது, சில நேரங்களில் சிக்னல்கள் சரியாக கிடைக்கவில்லையென்றால் ஆன்லைன் மூலம் விலை நிர்ணயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும்.

இதனால் விளை பொருட்களின் வரத்து அதிகம் இருக்கும் போது கொள்முதல் செய்ய கால தாமதம் ஏற்படும். எனவே ஆன்லைன் மூலம் விலை நிர்ணயம் செய்வதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் ஒழுங்குமுறை விற்பனைகூடத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்த விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை கொள்முதல் செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூடல்

இந்தநிலையில் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆன்லைன் மூலம் விளை பொருட்களுக்கான ஏலத்தில் கலந்து கொள்ள வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்காததால் ஏலம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. மறு ஏல தேதி விவசாயிகளுக்கு பின்னர் தெரிவிக்கப்படும் என நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடமும் மூடப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை திறப்பது சம்பந்தமாக விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. முன்னதாக விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு வக்கீல் தங்க தனவேல் தலைமையில் விவசாயிகள் திரண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள், விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி கடந்த 4 நாட்களாக மூடி வைத்துள்ள வேளாண் விற்பனைக்குழு அதிகாரிகளுக்கு, தங்களது எதிர்பை நூதனமுறையில் தெரிவிக்கும் வகையில் கடலூர் மாவட்ட அனைத்து விவசாய சங்கம் சார்பில் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்தனர்.

இனிப்பு

அதன்படி சந்தன மாலை, வெற்றிலை பாக்கு, இனிப்புகள் ஆகியவற்றை வாங்கி கொண்டு சப்-கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் வந்து அங்கிருந்த அதிகாரிகளுக்கு இனிப்புகள் கொடுத்து மாலை அணிவித்து பாராட்ட முயன்றனர். ஆனால் மாவட்ட விற்பனைக்குழு செயலாளர் விஜயா, விவசாயிகள் கொடுத்த இனிப்பை, வாங்க மறுத்ததுடன், பாராட்டையும் ஏற்க மறுத்தார். இதையடுத்து விவசாயிகள் சப்- கலெக்டர் பழனிக்கு இனிப்பு கொடுத்தனர். அதனை அவர் வாங்கிக்கொண்டு விவசாயிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.

விவசாயிகள் பேசுகையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள இ-நாம் திட்டத்தின் கீழ் ஆன்லைன் வழியாக வியாபாரிகள் ஏலத்தில் பங்குபெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படியே தமிழகத்தில் உள்ள அனைத்து விற்பனை கூடங்களிலும் தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன் மூலம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தவில்லை. வியாபாரிகள் வேண்டுமென்று நடைமுறைப்படுத்தாமல் லாப நோக்கோடு செயல்பட்டு வருகின்றனர்.

வியாபாரிகளுக்கு அதிகாரிகள் ஆதரவு

அதிகாரிகள் வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்படுவதோடு மட்டுமின்றி விற்பனை கூடத்தை மூடி வைத்துள்ளனர். இதனால் விவசாயிகளான நாங்கள் விளைவித்த விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றோம். கொள்முதல் செய்த பொருட்களுக்கு உரிய விலை கொடுப்பதில்லை. இ-நாம் திட்டம் குறித்து இதுவரை விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை.

விளை பொருட்களை தரம் பிரித்து அரசு அறிவித்துள்ள அடிப்படை ஆதார விலையை நிர்ணயிக்க வில்லை. இதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய சப்-கலெக்டர் பழனி முதலில் டிசம்பர் 1-ந் தேதி முதல் சோளம் மட்டும் இ-நாம் திட்டத்தில் கொள்முதல் செய்யப்படும், விரைவில் அனைத்து பொருட்களும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனை ஏற்று விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story