தஞ்சை கலெக்டர் அலுவலக வாயிலில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம்


தஞ்சை கலெக்டர் அலுவலக வாயிலில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம்
x

தஞ்சை கலெக்டர் அலுவலக வாயிலில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம்

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்துக்கு குறைவான பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கியதை கண்டித்து தஞசை கலெக்டர் அலுவலக வாயிலில் அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் சங்கம்

தஞ்சை மாவட்டத்துக்கு கடந்த 2021-2022 ம் ஆண்டில் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை குறைத்து வழங்கப்பட்டதை கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று காலை விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர்.

பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர்கள் மகேந்திரன், சாமி.மனோகரன், மாவட்டத் தலைவர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர் மதியழகன், மாவட்ட பொருளாளர் சந்திரகாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இழப்பீட்டு தொகை

ஆர்ப்பாட்டத்தில், தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2021-2022 ம் ஆண்டில் நெற்பயிர் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு மழையினால் பெரும் சேதம் ஏற்பட்டது. ஆனால் விவசாயிகள் செலுத்திய பயிர் காப்பீடுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்காமல் வெறும் ரூ.36 லட்சம் மட்டுமே வழங்கி விவசாயிகளை வஞ்சித்துள்ளனர். எனவே பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கியதை மறுபரிசீலனை செய்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.

திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடன் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

வாயிலில் அமர்ந்து கோஷம்

கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பின்னர் கலெக்டர் அலுவலக வாயிலில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் கலெக்டர் அலுவலகத்துக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புபணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் மற்றொரு வாசலை திறந்து அதன் வழியாக போக்குவரத்தை அனுமதித்தனர்.


Next Story