புறவழிச்சாலை விரிவாக்க பணியை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டம்
கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரியதொகை வழங்கக்கோரி புறவழிச்சாலை விரிவாக்க பணியை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி:
கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரியதொகை வழங்கக்கோரி புறவழிச்சாலை விரிவாக்க பணியை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை விரிவாக்க பணி
விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழிச்சாலை விரிவாக்க பணி கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக சீர்காழி அருகே எருக்கூர் முதல் கருவி வரை சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. இந்த பணிக்காக எருக்கூர், அரசூர், பாதரக்குடி, தாடாளன் கோவில், சட்டநாதபுரம், பணமங்கலம், காரைமேடு, தென்னாலக்குடி, காத்திருப்பு, அல்லிவிளாகம், செம்பதனிருப்பு, நடராஜர் பிள்ளை சாவடி, கருவி ஆகிய பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகள் கையகப்படுத்தப்பட்டது.
ஆனால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான உரிய தொகை இதுவரை வழங்கப்படவில்லை என கூறி விவசாயிகள், நில உரிமையாளர்கள் சீர்காழி புறவழிச்சாலை கோவில்பத்து பகுதியில் விவசாய சங்க தலைவர் வேட்டைங்குடி சீனிவாசன் தலைமையில் விரிவாக்க பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாலை விரிவாக்க பணிகளுக்காக கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்ட இடத்திற்கு உரிய தொகை உடனே வழங்க வேண்டும். அதுவரை சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ள கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
உரிய தொகை வழங்க வேண்டும்
இதுகுறித்து தகவல் அறிந்த நிலம் எடுப்பு தாசில்தார் தையல் நாயகி, சீர்காழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் தங்களுக்கு வழங்க வேண்டிய தொகையினை வழங்கிய பின்னரே சாலை விரிவாக்க பணியை மேற்கொள்ள வேண்டும் அதுவரை தங்கள் போராட்டம் தொடரும் என்றனர். இந்த நிலையில் சாலை அமைப்பதற்கு மண் ஏற்றி வந்த லாரிகள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றது. புறவழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சம்பந்தப்பட்ட துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர் போராட்டம்
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், சாலை விரிவாக்க பணிகளுக்காக கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் வழங்கினோம் ஆனால் இதனால் வரை உரிய தொகை வழங்காததால் நாங்கள் பாதிக்கப்பட்டு வருகிறோம். எங்களுக்கு பணம் வழங்காமல் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.
இது எங்களுக்கு மன வேதனை அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலை விரிவாக்க பணிகளுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு உடனடியாக உரிய தொகை வழங்க வேண்டும் இல்லையென்றால் குடும்பத்தோடு தொடர் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என வேதனையோடு தெரிவித்தனர்.