வெண்டைக்காயை ரோட்டில் கொட்டி விவசாயிகள் போராட்டம்
வெண்டைக்காயை ரோட்டில் கொட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 39-வது நாளான நேற்று வெண்டைக்காய் மாலை அணிந்து அரை நிர்வாண காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவிரி ஆற்றில் இறங்கி வெண்டைக்காயை கொட்டும் போராட்டம் நடத்த செல்வதாக விவசாயிகள் தெரிவித்தனர். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் நிவேதா லட்சுமி, கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து காவிரிக்குள் இறங்கும் போராட்டத்தை கைவிட்ட விவசாயிகள், அண்ணாசிலைக்கு வெண்டைக்காய் மாலை அணிவித்து போராட்டம் நடத்த அனுமதி கேட்டனர். அதற்கும் போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து திடீரென விவசாயிகள் வெண்டைக்காய் மாலையை எடுத்துக்கொண்டு அண்ணாசிலையை நோக்கி ஓடினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு முள்ளாக மாறியது. தொடர்ந்து ரோட்டில் வந்த வாகனங்களை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு மூட்டையில் வைத்திருந்த வெண்டைக்காயை ரோட்டில் கொட்டி அதில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வெண்டைக்காயை ரோட்டில் வீசி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 11 பெண்கள் உள்பட 60 பேரை கைது செய்து, அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே ரோட்டில் கொட்டப்பட்ட வெண்டைக்காய் மீது வாகனங்கள் ஏறி சென்றதில், ஒரு சில வாகனங்கள் வழுக்கி விபத்தில் சிக்கியது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த வெண்டைக்காயை அகற்றினர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.