குறுவை சாகுபடிக்காக வயல்களை தயார் செய்யும் பணி தீவிரம்
மேட்டூர் அணை திறக்கப்பட உள்ள நிலையில் குறுவை சாகுபடிக்காக வயல்களை தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
வல்லம்,
மேட்டூர் அணை திறக்கப்பட உள்ள நிலையில் குறுவை சாகுபடிக்காக வயல்களை தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
குறுவை சாகுபடி
தஞ்சை அருகே ஆலக்குடி, புதுக்கல்விராயன்பேட்டை பகுதிகளில் குறுவை சாகுபடிக்கான ஆயத்த பணிகளில் விவசாயிகள் மும்முரமாக இறங்கி உள்ளனர். இதற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழை பெரும் உதவியாக இருப்பதாக விவசாயிகள் கூறினர். தஞ்சை அருகே உள்ள ஆலக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கமாகும். ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு மே மாதம் 24-ந் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் குறுவை சாகுபடி இலக்கை தாண்டி அதிகளவு நடந்தது.
மேட்டூர் அணை திறப்பு
இந்நிலையில் இந்த ஆண்டு வழக்கம் போல ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் தண்ணீர் பாசனத்துக்கு திறந்து விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆலக்குடி, புதுக்கல்விராயன்பேட்டை பகுதிகளில் வயல்களில் குறுவை சாகுபடிக்கான ஆயத்த பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். வயல்களில் உள்ள களைகள் அப்புறப்படுத்தப்பட்டு டிராக்டரை கொண்டு உழும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். வயலை உழுது சீராக்கி கொண்டால் நாற்று விட்டு நடும் பணிகளை விரைவாக தொடங்கி விடலாம் என விவசாயிகள் தெரிவித்தனர்.
நாற்றங்கால் பணி
கடந்த வாரத்தில் வயலை உழுது தயார் நிலையில் வைத்திருந்த விவசாயிகளுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை பெரும் உதவியாக அமைந்துள்ளது.இதனை பயன்படுத்தி தற்போது விவசாயிகள் வயல்களில் எரு அடித்துள்ளனர். மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்ட உடன் நாற்றங்கால் அமைக்கும் பணி, பாய் நாற்றங்கால் அமைக்கும் பணி ஆகியவற்றில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் கூறினர்.