விளைச்சல் இருந்தும் பருத்திக்கு விலை இல்லை -விவசாயிகள் கவலை


விளைச்சல் இருந்தும் பருத்திக்கு விலை இல்லை -விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 24 March 2023 6:45 PM GMT (Updated: 24 March 2023 6:46 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் நன்றாக விளைந்த போதிலும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பருத்தி விலை பாதியாக குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டத்தில் நன்றாக விளைந்த போதிலும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பருத்தி விலை பாதியாக குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

முதல்போக சாகுபடி

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் வைகை தண்ணீர் பாயும் பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் நெல் விவசாயம் கருகி பெரும் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. இதனால் நெல் பயிரிட்ட விவசாயிகள் அரசின் நிவாரணம் மற்றும் பயிர்காப்பீடு நிவாரணத்தை நம்பி காத்திருக்கின்றனர். இதனிடையே நெற்பயிர்களை பாதியிலேயே அறுத்துவிட்டு அதில் பருத்தியை விவசாயிகள் பயிரிட்டனர். டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய பருத்தி சாகுபடி பணிகள் தற்போது நன்றாக விளைந்து கைகொடுக்க தொடங்கி உள்ளன.

.கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் பயிரிடப்பட்ட பருத்தி தற்போது நன்றாக விளைந்து விவசாயிகள் அறுவடை செய்யத்தொடங்கி உள்ளனர். முதல்போக சாகுபடி செய்து அறுவடை செய்ய தொடங்கிய விவசாயிகள் அதனை விற்பனை செய்ய கொண்டு சென்ற வண்ணம் உள்ளனர். இவ்வாறு சென்றவர்களுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் கடந்த ஆண்டு பருத்தி நன்றாக விளைந்ததோடு மட்டுமல்லாது அதிக விலைக்கு விற்பனையானது. இந்நிலையில் இந்த ஆண்டு பருத்தி நன்றாக விளைந்தபோதிலும் உரிய விலை கிடைக்கவில்லை என்று கவலை தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நன்றாக விளைந்த போதிலும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பருத்தி விலை பாதியாக குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்

இதுகுறித்து ராமநாதபுரம் அருகே உள்ள பி.முத்துச்செல்லாபுரம் பகுதியை சேர்ந்த விவசாயி துரைராஜ் கூறியதாவது:-

கடந்த ஆண்டு பருத்திக்கு ரூ.118 வரை விலை கிடைத்தது. இந்த விலையானது சில நாட்கள் நீடித்து வந்த நிலையில் ரூ.80 முதல் 100 வரை இறுதிவரை விலை கிடைத்தது. இதனால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். இந்த ஆண்டு ஆரம்பத்தில் அறுவடை செய்து நேற்று முன்தினம் விற்பனைக்கு கொண்டு சென்றபோது ரூ.64க்குதான் வாங்குகின்றனர்.

இந்த விலை உயருமா உயராதா என்பது வியாபாரிகள் கையில்தான் உள்ளது. இன்னும் சிறிதளவு விலை உயரும் வாய்ப்பு உள்ளது என்று கருதி நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். விலை உயரும் என கருதி பறித்த பருத்தியை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அடுத்த அறுவடைக்கு தயாராகி வருகிறோம். அரசு பருத்தி விலையை நிர்ணயம் செய்து விவசாயிகளின் துயர் துடைக்க வேண்டும். தற்போது கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதால் பருத்தி நனைந்து வருகிறது. இதனால் இழப்பு ஏற்படும் என்று கவலை அடைந்துள்ளோம். இருப்பினும் மழையால் பருத்திக்கு ஏற்பட்டுள்ள பூச்சி தாக்குதல் குறையும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story