பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமாதான பேச்சுவார்த்தை
பேராவூரணியை அடுத்த ரெட்டவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கரும்பு விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி தொகையை வழங்க வேண்டும்.
மோசடி செய்த கூட்டுறவு சங்க செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 19-ந்தேதி கோட்டாட்சியர் பிரபாகர் தலைமையில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படவில்லை. இதையடுத்து கடந்த 29-ந்தேதி காலை 10 மணிக்கு சமாதானப்பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச்செயலாளர் கண்ணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச்செயலாளர் வாசு மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் நேற்று விவசாயிகள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அப்போது பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் விடுமுறையில் இருப்பதாகவும், ஜனவரி 4-ந்தேதி பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
இதுகுறித்து முறையாக தங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை எனக்கூறி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதையடுத்து வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் அருள்ராஜ், பட்டுக்கோட்டை போலீசார்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரை சமாதானம் செய்தனர். அப்போது தகவல் தொடர்பு பரிமாற்றத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்காததற்கு வருவாய் துறையினர் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.