ஏரியில் கிராவல் மண் எடுப்பதை கண்டித்துகலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை :50 பனைமரங்களை வெட்டி சாயத்துவிட்டதாகவும் குற்றச்சாட்டு
ஏரியில் கிராவல் மண் எடுப்பதை கண்டித்து கள்ளக்குறிச்சிமாவட்ட கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். அப்போது, 50 பனைமரங்களை வெட்டி சாய்த்துவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கிராமத்தில் சுமார் 90 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த ஏரி மூலம் 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகிறது.
இந்த ஏரியில் அரசு அனுமதி பெறாமல், ராட்சத கிட்டாச்சி எந்திரங்களை கொண்டு, கிராவல் மண் எடுக்கப்பட்டு வருகிறது. சுமார் 20 அடி பள்ளம் தோண்டப்பட்டு, மண் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கிராவல் மண் எடுப்பதற்கு வசதியாக ஏரியில் இருந்த 50 பனைமரங்கள், 50-க்கும் மேற்பட்ட கருவேல் மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளது என்று அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
நடவடிக்கை இல்லை
இதற்கிடையே அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு மண் எடுக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். ஆனால், அவர்கள் அப்படி தான் மண் எடுப்போம் என்று கூறி, பொதுமக்களை மிரட்டி வந்தனர்.
இது சம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் பலமுறை கிராம மக்கள் கூறியும் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை.
முற்றுகை
இதனால் ஏரியில் கிராவல் மண் எடுப்பதை தடுக்க தவறிய பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்தும், உடனடியாக கிராவல் மண் எடுப்பதை தடுத்து நிறுத்த கோரியும், நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை உலகங்காத்தான் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி, கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் இருந்த இரும்பு கதவை இழுத்து பூட்டினார்கள்.
தள்ளுமுள்ளு
அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளு முள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்பின்னர், 5 விவசாயிகளை மட்டும் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரை நேரில் சந்தித்து மனு கொடுக்க போலீசார் அனுமதித்தனர். அதன்பேரில் அவர்கள் உள்ளே சென்று, தங்களது கோரிக்கைளை மனுவாக கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.