கருகிய நெற்பயிர்களுடன் விவசாயிகள் முற்றுகை
ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் கருகிய நெற்பயிர்களுடன் விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தலைவர் முத்துராமு, தாலுகா செயலாளர் கல்யாண சுந்தரம், தாலுகா தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் தேவிபட்டினம், பெருங்களுர் பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தாலுகா அலுவலகத்தை கருகிய நெற்பயிர்களுடன் முற்றுகையிட்டனர். இவர்கள் தாலுகா அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை உரிய நேரத்தில் பெய்யாமல் ஏமாற்றியதாலும், வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் முறையாக வழங்கப்படாததாலும் நெல்விவசாயம் அடியோடு பாழாகி போனது. நெற்பயிர்கள் அனைத்தும் கருகி விட்டன.
தேவிபட்டினம், வைகை, நரியனேந்தல், வட்டகுடி, சம்பை, கூட்டு வண்டி, நாரணமங்கலம், வடக்கனேந்தல், பாப்பனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கரில் நெல் விவசாயம் வளர்ச்சி அடையாமலேயே கருகி விழுந்துவிட்டது. பயிர்கடன் பெற்றும், நகைகளை அடமானம் வைத்தும் விவசாயம் பார்த்த நாங்கள் செய்வதறியாது திகைத்து வருகிறோம். மழையின்றி பாதிக்கப்பட்ட நெல் விவசாயத்திற்கு ஏக்கருக்கு ரூ.30ஆயிரம் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும். அதேபோன்று பயிர் பாதிப்பை முழுமையாக கணக்கிட்டு பயிர்காப்பீடு இழப்பீடு தொகை 100 சதவீதம் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.