கொட்டும் மழையில் விவசாயிகள் சாலைமறியல்


கொட்டும் மழையில் விவசாயிகள் சாலைமறியல்
x
தினத்தந்தி 12 Oct 2023 6:45 PM GMT (Updated: 12 Oct 2023 6:47 PM GMT)

பயிர் காப்பீடு வழங்காததை கண்டித்து ராமநாதபுரத்தில் கொட்டும் மழையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ராமநாதபுரம்

பயிர் காப்பீடு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் நெல்விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டது. பயிர்காப்பீடு செய்திருந்ததால் தங்களின் கடனை அடைக்க அரசின் நிவாரணமும், பயிர்காப்பீடு தொகை உதவியாக இருக்கும் என்று நம்பி காத்திருந்தனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கியது. அரசின் நிவாரணம் கிடைத்த நிலையில் பயிர்காப்பீடு வழங்காமல் இருந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பயிர்காப்பீடு நிறுவனம் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சியின் அடிப்படையில் காப்பீடு தொகை வழங்கி உள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்பட்ட 96 கிராமங்களுக்கு மட்டும் பயிர்காப்பீடு தொகை வழங்கப்படாமல் விடுபட்டுள்ளது. பயிர்காப்பீடு தொகை வழங்காததற்கான காரணம் தெரிவிக்கப்படாமல் 96 கிராமங்களுக்கும் காப்பீடு தொகை வழங்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.

கொட்டும் மழையில் மறியல்

இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் தங்களுக்கு பயிர்காப்பீடு வழங்ககோரி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும் திரளாக வந்து மனு அளித்து வருகின்றனர். நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு முதுகுளத்தூர் தாலுகா பகுதியை சேர்ந்த ஏராளமான ஆண்,பெண் விவசாயிகள் திரண்டு வந்தனர். அவர்கள் தங்களுக்கு பயிர்காப்பீடு வழங்க வேண்டும், அதற்கான உத்தரவாதத்தை கலெக்டர் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி கூறி வாயில் கருப்புதுணி கட்டி தர்ணாவில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் அப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு சென்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது திடீரென இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இருப்பினும் கனமழையையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.

கலெக்டர் பேச்சுவார்த்தை

இதுகுறித்து அறிந்த விவசாய இணை இயக்குனர் சரஸ்வதி, தாசில்தார் ஸ்ரீதர், பயிர்காப்பீடு நிறுவனத்தினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததால் கலெக்டரை சந்திக்க வேண்டும் என்று கூறி அவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலெக்டரை சந்திக்க அழைத்து செல்லப்பட்டனர்.

கலெக்டர் விஷ்ணுசந்திரன், விவசாயிகளிடம் இதுதொடர்பாக பயிர்காப்பீடு நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார். இதன்பின்னர் விவசாயிகள் கலைந்து சென்றனர். மேலும், பயிர்காப்பீடு நிறுவனத்திடம் இருந்து தங்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்காவிட்டால் பசும்பொன் வரும் முதல்-அமைச்சர் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபடபோவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


Next Story