காட்டு யானை வனப்பகுதிக்குள் விரட்டக்கோரி விவசாயிகள் சாலை மறியல்
காட்டு யானை வனப்பகுதிக்குள் விரட்டக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காரமடை
காட்டு யானை வனப்பகுதிக்குள் விரட்டக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காட்டு யானை
கோவை மாவட்டம் காரமடை அருகே ஆதிமாதையனூர் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு நுழைந்த நோய் வாய்பட்ட மக்னா காட்டு யானை தொடர்ந்து விவசாய நிலத்தில் முகாமிட்டுள்ளது. நோய் வாய்ப்பட்டு மெலிந்த நிலையில் காணப்படும் மக்னா யானையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டியடிக்க வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர். இருப்பினும் யானை வனத்தினுள் செல்லாமல் விவசாய நிலத்திலேயே முகாமிட்டுள்ளது.
சாலை மறியல்
இதனால் விவசாயிகள் தங்கள் அன்றாட பணியினை மேற்கொள்ள முடியாமல் அச்சுறுத்தலாக உள்ளதாக கூறி யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வலியுறுத்தி வெள்ளியங்காடு- காரமடை சாலையில் தாயனூர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறும்போது, காட்டு யானை நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதாகவும், எனவே இந்த யானையை அடர் வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும். இல்லையெனில் இந்த யானையை தங்கள் பகுதியில் இருந்து பிடித்து செல்ல வேண்டும் என்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் தாசில்தார் மாலதி ஆகியோர் காட்டு யானை விரட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதனால் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
50 பேர் மீது வழக்கு
இந்தநிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட வெள்ளியங்காடு ஊராட்சி மன்ற துணை தலைவர் ரங்கராஜன், விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேணுகோபால் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் மீது எவ்வித முன் அனுமதி பெறாமலும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், அவசர தேவைக்கு செல்லும் நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்தது உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.