குறைதீர்வு கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து வெளிநடப்பு


குறைதீர்வு கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து வெளிநடப்பு
x

திருவண்ணாமலையில் நடந்த குறைதீர்வு கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் நடந்த குறைதீர்வு கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பு

திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் திருவண்ணாமலை தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கடந்த கூட்டங்களில் விவசாயம் சார்ந்த துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் கூட்டத்தில் குறிப்பிட்ட சில துறை சேர்ந்த அலுவலர்கள் வராததை கண்டித்து விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்து வட்டார வளர்ச்சி அலுவலக நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெற்றிவேல் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் அவர்கள் குறைதீர்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தலைமை தாங்கினார். இதில் வேளாண்மை அலுவலர்கள் அன்பழகன், செல்வராஜ், தாசில்தார் சரளா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருணாசலம், பாபு உள்பட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இடைத்தரகர்கள் தொல்லை

தொடர்ந்து கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், ஏரி மண் எடுக்க அனுமதி கேட்கும் விவசாயிகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுத்து அனுமதி வழங்க வேண்டும்.

100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்களை விவசாய நிலங்களில் வரப்பு வெட்ட பயன்படுத்த வேண்டும். பிரதமரின் கவுரவ நிதி திட்டம் முறையாக அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் உள்ள இடைத்தரகர் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டரின் நேர்முக உதவியாளர் உத்தரவிட்டார்.

போளூர்

போளூர் அடுத்த வசூர் வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. காலை 10 மணிக்கு விவசாயிகள் அனைவரும் வந்திருந்தனர்.

2 மணி நேரம் காத்திருந்தும் கூட்டம் நடத்த வேண்டிய அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் வராததால் விவசாயிகள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

வெளியில் வந்த அவர்கள், குறைதீர்வு கூட்டத்துக்கு வராத அதிகாரிகளை கண்டிக்கிறோம். என்.எல்.சி. நிறுவனம் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கண்டிக்கிறோம் என்று கோஷமிட்டனர்.


Related Tags :
Next Story