பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிப்பு திட்டத்தில் ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்


பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிப்பு திட்டத்தில் ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 15 Oct 2023 7:00 PM GMT (Updated: 15 Oct 2023 7:00 PM GMT)

பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிப்பு திட்டத்தில் ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலியில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்டகலெக்டர் ஆஷாஅஜீத் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிக்கும் விவசாயிகளுக்கு, தமிழக அரசு வேளாண்மை துறையின் மூலம் ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. பாரம்பரிய நெல் விதை வங்கி திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் அக்ரிஸ்நெட் வலைதளம் அல்லது உழவன் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், குறைந்தபட்சம் 100 பாரம்பரிய நெல் ரகங்களை நெல் வங்கியில் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பராமரித்து வரும் பாரம்பரிய நெல் ரகங்களை மறு உற்பத்தி செய்து இனத்தூய்மையுடன் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் மரபுசார் நெல் ரகங்களை உற்பத்தி செய்து பராமரிக்க வேண்டும். விதை வங்கியில் பராமரிக்கப்படும் பாரம்பரிய நெல் ரகங்கள் நல்ல முளைப்புத் திறனுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

உழவன் செயலி

வயல்களில் உரிய அளவில் பாரம்பரிய முறையில் சாகுபடி செய்ய வேண்டும். பெறப்படும் விண்ணப்பங்களை மாவட்ட கலெக்டரின் தலைமையிலான தேர்வுக்குழு மூலம் பரிசீலிக்கப்பட்டு தகுதியுடைய விண்ணப்பங்கள் மாநில தேர்வுக்குழுவிற்கு பரிந்துரை செய்யப்படும். இத்திட்டத்தின் பயனை ஒருமுறை மட்டுமே பயனாளி பெற முடியும்.

கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பார்வையிடும் வகையில் முறையாக காட்சிப்படுத்த வேண்டும். பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிக்கும் விவசாயிகள், ஊக்கத்தொகை பெறுவதற்காக அக்ரிஸ்நெட் வலைதளம் அல்லது உழவன் செயலியில் விண்ணப்பிக்க தேவையான விண்ணப்ப படிவங்களை தங்கள் வட்டாரத்திலுள்ள வேளாண்மை உதவி இயக்குனரை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story