பாரம்பரிய விவசாயம் செய்ய உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்


பாரம்பரிய விவசாயம் செய்ய உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 5 July 2023 12:15 AM IST (Updated: 5 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விவசாய மேம்பாட்டு திட்டத்தில் அரசு மானியத்தில் பாரம்பரிய விவசாயம் செய்ய உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

விவசாய மேம்பாட்டு திட்டத்தில் அரசு மானியத்தில் பாரம்பரிய விவசாயம் செய்ய உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

அரசு மானியம்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- நிலையான உணவு உற்பத்தி மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு, இயற்கை வள பாதுகாப்பு மற்றும் மண்வள ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்காக இந்திய அரசும், தமிழக அரசும் பாரம்பரிய வேளாண்மை மேம்பாட்டு திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தி வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் 2023-2024-ம் ஆண்டுக்கான பாரம்பரிய வேளாண்மை மேம்பாட்டு திட்டத்தில் குழுவாக 300 எக்டர் மற்றும் தனி விவசாயிகளுக்கு 140 எக்டர் என மொத்தம் 440 எக்டரில் ரூ.52 லட்சத்து 30 ஆயிரம் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

பாரம்பரிய வேளாண்மை மேம்பாட்டு திட்டத்தில் குழுவாக சேர்ந்து பயன்பெற ஒரு கிராமத்தை சேர்ந்த அல்லது அருகிலுள்ள 2-3 கிராமத்திலுள்ள குறைந்தது 20 விவசாயிகள் சேர்ந்து 20 எக்டர் கொண்ட தொகுப்பினை உருவாக்கி பாரம்பரிய விவசாயத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். இத்திட்டத்தில் ஒரு எக்டருக்கு முதலாம் ஆண்டு ரூ.16500, 2-ம் ஆண்டு ரூ.17000, 3-ம் ஆண்டு ரூ.16500 என மொத்தம் ஒரு எக்டருக்கு ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

பதிவு கட்டணம்

பாரம்பரிய வேளாண்மை மேம்பாட்டு திட்டத்தில் மற்றொரு துணை திட்டமாக ஏற்கனவே பாரம்பரிய விவசாயத்தில் ஈடுபட்டு வரும் தனி விவசாயிகள், குழுவாக சேர்ந்து பயன்பெற இயலாத விவசாயிகள் வேறு எந்த திட்டத்திலும் பயன்பெறாத பாரம்பரிய விவசாயிகளுக்கு பதிவு கட்டணமாக இத்திட்டத்தில் ஒரு எக்டருக்கு முதலாம் ஆண்டு ரூ.2000, 2-ம் ஆண்டு ரூ.2000, 3-ம் ஆண்டு ரூ.2000 என மொத்தம் ஒரு எக்டருக்கு ரூ.6000 மானியம் வழங்கப்படும்.

பாரம்பரிய வேளாண்மை மேம்பாட்டு திட்டத்தில் குழுவாக சேர்ந்து பயன்பெறும் விவசாயிகளுக்கு ஒரு எக்டருக்கு முதல் ஆண்டில் குழுவினை உருவாக்கிட ரூ.1000, குழுவின் தகவல் சேகரித்து பராமரித்திட ரூ.1500 மண்டல ஆலோசனை மற்றும் பதிவு கட்டணமாக ரூ.700, பாரம்பரிய விவசாயம் செய்திட பின்னேற்பு மானிய ஊக்கத்தொகை ரூ.12000 மற்றும் விளம்பர செலவினங்கள் ரூ.1300 என மொத்தம் ஒரு எக்டருக்கு முதலாம் ஆண்டு ரூ.16500 மானியம் வழங்கப்படும். எனவே அனைத்து வட்டார விவசாயிகள் இந்த இணையதளத்தில் http://tnagrisnet.tn.gov.in "உழவன் செயலி" மூலம் பதிவு செய்து (அல்லது) தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story