மானிய விலையில் பனைவிதைகள் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
மானிய விலையில் பனைவிதைகள் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:-
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் செயல்பட்டு வரும் பனை மேம்பாட்டு இயக்க திட்டத்தின் கீழ் பனை சாகுபடியை ஊக்குவிக்கவும், பனை சாகுபடி செய்து வரும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பனை விதைகளும், பனை கன்றுகளும் மானியத்தில் வினியோகம் செய்ய 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கள்ளக்குறிச்சி மாவட்ட தோட்டக்கலைத்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பனை விதைகள் பயனாளி ஒருவருக்கு (தனிநபர்) அதிகபட்சமாக 50 விதைகளும் மற்றும் பனை கன்றுகள் அதிகபட்சமாக 15 கன்றுகளும் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படவுள்ளது. மேலும் பொது இடங்களில் தொண்டு நிறுவனங்கள், ஊராட்சிமன்றங்கள் மூலம் விதைக்க அதிகபட்சமாக 100 பனை விதைகளும், நடுவதற்கு 30 பனை கன்றுகளும் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும். எனவே இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் விவசாயிகள், தங்கள் பகுதி உதவி தோட்டக்கலை அலுவலர் மற்றும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் https//www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/rdgistration என்கிற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.