கோடை உழவு செய்து விவசாயிகள் பயனடையலாம்
தியாகதுருகம் பகுதியில் கோடை உழவு செய்து விவசாயிகள் பயனடையலாம் என்று தியாகதுருகம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சந்துரு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தியாகதுருகம்,
தற்போது கோடை காலத்தில் பெரும்பாலான விவசாயிகள் தங்களது நிலத்தினை தரிசாக வைத்துள்ளனர். இத்தகைய தரிசு நிலங்களில் கோடை மழை பெய்தவுடன் கோடை உழவு செய்ய வேண்டும். கோடை உழவு செய்வதன் மூலம் நிலத்தின் மேற்பரப்பில் ஏற்பட்ட கடினத்தன்மை அகற்றப்படுகிறது.
மேலும் மழை நீர் அந்த நிலத்திலேயே சேகரிக்கப்பட்டு ஈரத்தன்மை பாதுகாக்கப்படுகிறது. மேலும் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்ட நிலமாக இருந்தால் முன்பருவத்தில் படைப்புழு பாதிப்பு ஏற்பட்டு புழுக்கள் கூட்டுப்புழுக்களாக மாற்றம் அடைந்து மண்ணில் புதைந்திருக்கும்.
இந்த கூட்டுப்புழுக்கள் கோடை உழவு செய்வதன் மூலம் நிலத்தில் உள்ள புழுக்கள், களை செடிகள் மற்றும் முந்தைய பயிர் சாகுபடியின் மூலம் வயலில் தேங்கியுள்ள நோய் தாக்கிய பயிர் கழிவுகளில் உள்ள நோய் காரணிகள் ஆகியவைகள் அழிக்கப்படுகிறது.
நோய் பரவுவது தடுக்கப்படும்
இதனால் அடுத்த பருவத்திற்கு பயிர் செய்யும் போது நோய்கள் பரவுவது தடுக்கப்படும். எனவே கோடை மழை பெய்யும் போது கோடை உழவினை செய்து விவசாயிகள் பயனடையலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.