உழவன் செயலி மூலம் மரக்கன்றுகளை விவசாயிகள் பெறலாம்


உழவன் செயலி மூலம் மரக்கன்றுகளை விவசாயிகள் பெறலாம்
x

பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் மூலம் விவசாயிகள் உழவன் செயலி மூலம் மரக்கன்றுகளை பெற்று பயன்பெறலாம் என்று வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் மூலம் விவசாயிகள் உழவன் செயலி மூலம் மரக்கன்றுகளை பெற்று பயன்பெறலாம் என்று வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பசுமை தமிழ்நாடு இயக்கம்

தமிழ்நாட்டின் சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்திடவும், விவசாய நிலங்களில் நிரந்தர பசுமை சூழ்நிலையினை உருவாக்குவதற்கும் பசுமை தமிழ்நாடு இயக்கம் என்ற திட்டத்தின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு வேளாண்மைத் துறை மற்றும் வனத்துறை மூலமாக செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தினால் வருங்காலங்களில் விவசாயிகளுக்கு ஒரு நிரந்தர வைப்புத் தொகை கிடைப்பதுடன் விவசாய நிலங்களின் மண் வளமும் அதிகரிப்பதோடல்லாமல் மாநிலத்தின் பசுமைப் பரப்பும், சுற்றுப்புறச் சூழலும் மேம்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் தேக்கு, ஈட்டி, மகோகனி, மருது, வேம்பு, மலை வேம்பு, நாவல், பெருநெல்லி, செம்மரம், புங்கன், வேங்கை மற்றும் சந்தனம் உள்பட பல்வேறு தரமான மரக்கன்றுகள் தமிழ்நாடு அரசு வனத்துறையின் கீழ் உள்ள அரசு நாற்றங்கால்களில் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தயாராக உள்ளன.

விவசாயிகள் மரக்கன்றுகளை பெறுவதற்காக உழவன் செயலியில் பதிவு செய்து வேளாண்மைத் துறையின் பாிந்துரையின் படி தேவையான மரக்கன்றுகளை அருகில் உள்ள தமிழ்நாடு வனத்துறையின் நாற்றங்காலில் இருந்து இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

௨௦௦ மரக்கன்றுகள்

மரக்கன்றுகள் வினியோகம் வரப்பு நடவு முறை எனில் ஏக்கருக்கு 60 மரக்கன்றுகளும், விவசாய நிலங்களில் தனியாக நடவு செய்ய ஏக்கருக்கு 200 மரக்கன்றுகளும் வழங்கப்படும். இத்திட்டத்தில் விருப்பமுள்ள அனைத்து விவசாயிகளும் சேர்ந்து பயன்பெறலாம். சிறுகுறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். உழவன் செயலி மூலமாக தேவையான மரக்கன்றுகளை விவசாயிகள் பதிவு செய்து பெற்று கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

இத்திட்டத்தில் விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டு உள்ள பயிர் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் பாதிப்படையாமல் கூடுதலாக ஊடு பயிராக மரங்களை வளர்த்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story