வேளாண் கண்காட்சியில் விவசாயிகள் பங்கேற்கலாம்
திருச்சியில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கும் வேளாண் கண்காட்சியில் விவசாயிகள் பங்கேற்கலாம் என்று கலெக்டர் மகாபாரதி அழைப்பு விடுத்துள்ளார்.
திருச்சியில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கும் வேளாண் கண்காட்சியில் விவசாயிகள் பங்கேற்கலாம் என்று கலெக்டர் மகாபாரதி அழைப்பு விடுத்துள்ளார்.
வேளாண் கண்காட்சி
திருச்சியில் நடைபெறும் வேளாண் கண்காட்சியில் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் பங்கேற்கலாம் என்று மாவட்ட கலெக்டர் மகாபாரதி அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த சட்டமன்ற கூட்டத்தில் 2023-2024-ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நவீன தொழில் நுட்பங்கள், வேளாண் எந்திரங்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், பொது மக்கள், உணவு பதப்படுத்துபவர்கள் பயன்பெறும் வகையில், திருச்சியில் விவசாய கண்காட்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
சிறப்பு அம்சங்கள்
அதன்படி இன்று (வியாழக்கிழமை) தொடங்கி நாளை மறுநாள் 29-ந்தேதி (சனிக்கிழமை) வரை 3 நாட்கள், திருச்சியில் உள்ள கேர் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் வேளாண் கண்காட்சி நடக்கிறது.
இதில் வேளாண்மையை எளிமைப்படுத்தும் வகையில் நவீன தொழில் நுட்பங்கள், வருமானத்தை பெருக்குவதற்கான வேளாண் பொருட்களை மதிப்புக்கூட்டு தொழில் நுட்பங்கள், பாரம்பரியம் மிக்க மரபுமிக்க தொழில்நுட்பங்கள், நவீன வேளாண் எந்திரங்கள், பசுமை குடில் தொழில் நுட்பங்கள், பாரம்பரிய நெல் மற்றும் பிற பயிர் ரகங்கள், பாரம்பரிய உணவு அரங்கங்கள், வேளாண் மானிய உதவிகள் பெற முன்பதிவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இக்கண்காட்சியில் இடம் பெறுகின்றன.
இணையதளத்தில் முன்பதிவு
எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் இக்கண்காட்சியில் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் தகவலுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வேளாண்மை சார்ந்த நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் அரங்குகள் அமைக்க விரும்புவோர் agriexpo2023.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.