மானிய விலையில் பனை கன்றுகள் பெறுவதற்கு விவசாயிகள் பதிவு செய்யலாம்
மானிய விலையில் பனை கன்றுகள் பெறுவதற்கு விவசாயிகள் பதிவு செய்யலாம்.
பெரம்பலூர் மாவட்டத்தில் எண்ணெய் பனை சாகுபடி பரப்பினை ஊக்குவிப்பதற்காகவும், ஏற்கனவே எண்ணெய் பனை சாகுபடி செய்து வரும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் 2023-24-ம் நிதியாண்டில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம்-எண்ணெய் பனை திட்டம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையால் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் எண்ணெய் பனை சாகுபடி பரப்பினை ஊக்குவிக்க 100 சதவீத மானிய விலையில் பனை கன்றுகள் வழங்கப்படுவதுடன், ஏற்கனவே எண்ணெய் பனை சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு ஊடு பயிரிடுதல் மற்றும் பராமரிப்பு செலவினத்திற்காக எக்டேர் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.5 ஆயிரத்து 250 வழங்கப்பட உள்ளது.
மேலும், இத்திட்டத்தின் கீழ் மானாவாரி நிலத்தில் எண்ணெய் பனை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைத்திட அதிகபட்சமாக ரூ.50 ஆயிரமும், டீசல் மின்சார மோட்டார் வாங்கிட மானியமாக ரூ.22 ஆயிரத்து 500-ம் வழங்கப்பட உள்ளது. இதனை தவிர எண்ணெய் பனை சாகுபடி மற்றும் பராமரிப்புக்கு தேவைப்படும் பல்வேறு உபகரணங்கள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. எனவே ஆர்வம் உள்ள விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகியோ அல்லது https://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/registration என்ற இணையதளத்தில் பதிவு செய்தோ பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.