விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம்
சங்கராபுரம் வட்டாரத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம் என சங்கராபுரம் வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்பராணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சங்கராபுரம் வட்டாரத்தில் சம்பா சாகுபடி செய்த பயிருக்கு இதுவரை 185 ஹெக்டருக்கு மொத்தம் 198 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். உளுந்து பயிருக்கு இதுவரை 19.197 ஹெக்டருக்கு 19 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர், தற்போது சம்பா நெல் மற்றும் உளுந்து பயிருக்கு பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசிநாள் 15.11.22 ஆகும். வடகிழக்கு பருவ மழை நடப்பு ஆண்டில் இயல்பை விட கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இயற்கை சீற்றத்தினால் ஏற்படும் பொருளாதார இழப்பில் இருந்து காத்துக் கொள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். பயிர் காப்பீடு செய்வதற்கு சிட்டா, நடப்பு பசலி 1432 அடங்கல், ஆதார் எண், வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் ஆகிய ஆவணங்களுடன் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் உரிய முன்மொழிவு படிவத்தினை பூர்த்தி செய்து காப்பீடு செய்யலாம். பயிர் கடன் பெறும் விவசாயிகள் தங்களது விருப்பத்தின் பேரில் காப்பீடு செய்து கொள்ளலாம். நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.464 மற்றும் உளுந்து பயிருக்கு ஏக்கருக்கு ரூ.266 செலுத்தி பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.