மண் அள்ளி வந்த லாரிகளை சிறைபிடித்த விவசாயிகள்
மண் அள்ளி வந்த லாரிகளை விவசாயிகள் சிறை பிடித்தனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே எஸ்.ராமலிங்கபுரம் கிராமத்தில் பேராநல்லூர் கண்மாய் அமைந்துள்ளது. சாலை பணிகளுக்காக மொத்தம் 14 கண்மாயில் மண் அள்ளுவதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. இதில் பேராநல்லூர் கண்மாயிலும் கடந்த சில நாட்களாக லாரி மூலம் மண் அள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்த கண்மாய்க்குள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக அதிக ஆழத்திற்கு மண் எடுப்பதாகவும், வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதாகவும் கூறி லாரியில் மண் அள்ளி வந்த 20 வாகனங்களை சிறை பிடித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாட்சியர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.