`குளத்தை காணவில்லை' என விவசாயிகள் புகார்


`குளத்தை காணவில்லை என விவசாயிகள் புகார்
x
தினத்தந்தி 28 April 2023 6:45 PM GMT (Updated: 28 April 2023 6:46 PM GMT)

தென்காசி மாவட்ட குறைதீர்க்கும் கூட்டத்தில் `குளத்தை காணவில்லை' என விவசாயிகள் புகார் அளித்தனர்.

தென்காசி

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை மனுக்களாக கொடுத்தனர்.

அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாய அணி சார்பில் மாவட்ட செயலாளர் டேனி அருள்சிங் தலைமையில் ஒரு மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகாவில் உள்ள மங்களாபுரம் கிராமத்தில் இருந்த பன்னிருகைப்பேரி குளம் மற்றும் சிவசங்கர நாராயண பேரி கால்வாய் உள்ளிட்ட இரண்டு நீர்நிலைகளையும் காணவில்லை. அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து காணாமல் போன குளத்தையும், கால்வாயையும் மீட்டு தர கேட்டுக்கொள்கிறோம், என கூறி உள்ளனர்.

அந்த கோரிக்கை மனுவை கொடுக்க வந்தபோது, நடிகர் வடிவேலு பாணியில் 'குளத்தை காணல கலெக்டர் சார்' கண்டுபிடிச்சு தாங்க கலெக்டர் சார்' என்கின்ற மீம்சை வெளிப்படுத்தும் விதமாக ஒரு மீம்ஸ் அடங்கிய நகலையும் கொண்டு வந்திருந்தனர்.

அந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று குளத்தை கண்டுபிடித்து தர தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்தார்.



Next Story