முளைப்புத்திறன் இல்லாத நிலக்கடலை விதையை கொள்முதல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை


முளைப்புத்திறன் இல்லாத நிலக்கடலை விதையை கொள்முதல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை
x

முளைப்பு திறன் இல்லாத நிலக்கடலை விதையை கொள்முதல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர், நவ.26-

முளைப்பு திறன் இல்லாத நிலக்கடலை விதையை கொள்முதல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

குறைதீர்க்கும் கூட்டம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்றுகாலை நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

கக்கரை சுகுமாறன்:- தஞ்சை மாவட்டத்தில் தற்போது மானாவாரி பகுதியில் நிலக்கடலை விதைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக வேளாண்மைத்துறை மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நிலக்கடலை விதைகள் முளைப்புத் திறன் இல்லாமல் உள்ளது. இந்த விதைகளை கொள்முதல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் யூரியா உரத்தட்டுப்பாடு உள்ளது.

மின் இணைப்புக்கு கட்டணம் வசூல்

தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ்:- குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் முன்கூட்டியே அரவை பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில் 15 நாட்களுக்குள் அரவைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கரும்புகளுக்கு பணம் பட்டுவாடா செய்ய வேண்டும். இரவு 12 மணிக்கு கொடுக்கக்கூடிய மும்முனை மின்சாரத்தை இரவு 10 மணிக்கு கொடுக்க வேண்டும்.

சுவாமிமலை சுந்தரவிமல்நாதன்:- தோட்டக்கலை பயிர்கள், மலர்கள் சாகுபடி செய்யும் குறைந்த குதிரைதிறன் மின்மோட்டார்களை பயன்படுத்தும் சுமார் 30 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்புக்கு கட்டணம் வசூலிக்கப்படுவது பாரபட்சமானது. இவர்களுக்கு கட்டணமில்லா மின் வினியோக சேவை வழங்கப்பட வேண்டும். பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுவதை ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

தரமான விதைகள்

ஆம்பலாப்பட்டு தெற்கு தங்கவேல்:- கடலை, உளுந்து, பாசிப்பயறு சாகுபடி செய்வதற்கு டிசம்பர், ஜனவரி மாதம் சிறந்த மாதங்களாகும். சில தனியார் நிறுவனத்தில் 35 கிலோ கொண்ட நிலக்கடலை விதைகள் ரூ.4,500 முதல் ரூ.4,800 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதுவும் தரமற்ற விதைகளாக உள்ளன. எனவே அரசே தரமான விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

மேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள், விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர்.

கலெக்டர் பதில்

விவசாயிகள் கோரிக்கைகளுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பதிலளித்து பேசும்போது, தரமற்ற நிலக்கடலை விதைகளின் முளைப்புத்திறன் தொடர்பாக வேளாண்மைத் துறையின் விதைச்சான்று பிரிவினர் ஆய்வு செய்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அதுவரை விவசாயிகள் பாதிக்காக வகையில் அந்த நிலக்கடலை விதைகளை விநியோகம் செய்வதை நிறுத்தி வைக்க வேண்டும். ஆக்கிரமிப்புகள் தொடர்பாக விவசாயிகள் தெரிவித்த பகுதிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.


Next Story