உப்பனாற்றில் முழுமை பெறாத தூர்வாரும் பணி
சீர்காழி அருகே உப்பனாற்றில் தூர்வாரும் பணி முழுமை பெறாததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
சீர்காழி அருகே உப்பனாற்றில் தூர்வாரும் பணி முழுமை பெறாததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
உப்பனாறு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மேல தேனூர் முதல் திருமுல்லைவாசல் வரை 15 கிலோமீட்டர் தூரத்துக்கு உப்பனாறு செல்கிறது. திருமுல்லைவாசல், ராதாநல்லூர், எடமணல், கீராநல்லூர், திட்டை, வெள்ளப்பள்ளம், தில்லைவிடங்கன், சட்டநாதபுரம், தென்பாதி, தாடாளன்கோவில், பணமங்கலம், ஆதமங்கலம், நெம்மேலி, தேனூர், புதுத்துரை, கீழமூவர்க்கரை உள்ளிட்ட கிராமங்களின் முக்கிய வடிகாலாகவும் உப்பனாறு திகழ்கிறது.
மழைக்காலங்களில் பல்வேறு பாசன வாய்க்கால்களில் வரக்கூடிய உபரி நீர் உப்பனாற்றில் தான் திறந்து விடப்படுகிறது.
முழுமை பெறவில்லை
இந்த நிலையில் உப்பனாற்றில் மரம், செடி, கொடிகள் மண்டி காணப்பட்டது. இதனால் மழைக்காலங்களில் மழை நீர் வடிய வழி இல்லாமல் ஆற்றின் அருகில் உள்ள வயல்வெளிகள் பாதிக்கப்பட்டன. இதுதொடர்பாக விவசாயிகள் விடுத்த கோரிக்கையின்படி உப்பனாற்றை தூர்வார தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி ஆற்றின் இரு கரைகளிலும் தூர்வாரும் பணி நடைபெற்றது. இதில் ஆற்றின் கரை சீரமைப்பு பணிகள் முழுமை பெறாமலும், கரையோரம் உள்ள வாய்க்கால்களில் மதகுகள் அமைக்கப்படாமலும் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எதிர்பார்ப்பு
மழைக்காலங்களில் ஆற்று நீர் வயலுக்கு செல்லாத வகையில் சட்ரஸ் அமைத்து தர வேண்டும். கரைகளை முழுமையாக பலப்படுத்தி தூர்வாரும் பணிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'மேல தேனூர் முதல் திருமுல்லைவாசல் வரை உப்பனாற்றில் கரை சீரமைக்கும் பணி பெயர் அளவிலேயே நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் கரைகள் முறையாக பலப்படுத்தப்படவில்லை. உப்பனாற்றில் கலக்கும் பல்வேறு வாய்க்கால்களில் மதகு, சட்ரஸ் அமைக்கும் பணி முழுமை பெறாமல் உள்ளது. மழைக்காலத்துக்கு முன்பு முழுமை பெறாமல் உள்ள தூர்வாரும் பணிகளை நிறைவேற்ற வேண்டும்' என்றனர்.