வாழை, தென்னையை மாவு பூச்சிகள் தாக்குவதை தடுக்க வேண்டும்-குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை


வாழை, தென்னையை மாவு பூச்சிகள் தாக்குவதை தடுக்க வேண்டும்-குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
x

வாழை, தென்னையை மாவு பூச்சிகள் தாக்குவதை தடுக்க வேண்டும் என்று குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

சேலம்

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசும் போது, மரவள்ளியில் மாவு பூச்சிகள் தாக்குகின்றன. இதனால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறோம். இந்த நிலையில் தற்போது வாழை, தென்னையை மாவு பூச்சிகள் தாக்குகின்றன. இதன் காரணமாக நஷ்டம் ஏற்படுகிறது.

எனவே வாழை, தென்னையில் மாவு பூச்சிகள் தாக்குவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது கலெக்டர் கார்மேகம் பேசும் போது, விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

மழை அளவு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்டம் மூலம் இடுபொருட்கள் கொள்முதல் செய்ய 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் ஆண்டு மழை அளவு 997.90 மில்லி மீட்டர். இந்த ஆண்டு இதுவரை 616.3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. ஜூலை 2022 வரை 73 ஆயிரத்து 628 ஹெக்டேர் பரப்பில் நெல், சோளம், கரும்பு, பருத்தி, சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

சிறு தானியங்கள்

இந்த ஆண்டு 240 மெட்ரிக் டன் நெல், 96 மெட்ரிக் டன் சிறு தானியங்கள், 428 மெட்ரிக் டன் பயறு வகைகள், 307 மெட்ரிக் டன் எண்ணெய் வித்துக்கள், 2 மெட்ரிக் டன் பருத்தி ஆகியவை வினியோகம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதற்கு தேவையான அளவில் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்கள் தேவையான அளவு கையிருப்பில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, வேளாண்மை இணை இயக்குனர் கணேசன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் புருசோஷத்தமன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் தமிழ்செல்வி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்வமணி, உதவி கலெக்டர்கள் விஷ்ணுவர்த்தினி, சரண்யா, சவுமியா உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தோட்டக்கலைத்துறையின் சார்பில் மரவள்ளியில் மாவுப் பூச்சி தாக்குதலை தடுக்கும் வழிமுறைகள் குறித்த கருத்து காட்சியை கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டார்.


Next Story