நசுவினி அணையை விரிவுபடுத்த நடவடிக்கை- விவசாயிகள்
பட்டுக்கோட்டை அருகே வெண்டாக்கோட்டை நசுவினி அணையை விரிவுபடுத்தி பாசன வசதியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உதவி கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை அருகே வெண்டாக்கோட்டை நசுவினி அணையை விரிவுபடுத்தி பாசன வசதியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உதவி கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நசுவினி அணை
பட்டுக்கோட்டையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு உதவி கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். இதில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பக்கிரிசாமி மற்றும் விவசாயிகள் பட்டுக்கோட்டை அருகே வெண்டாக்கோட்டையில் நசுவினி ஆற்றில் உள்ள அணையை விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த அணையின் மூலம் 3,500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது என்றும் இந்த அணையை விரிவுபடுத்தி கட்டினால் 25 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.
உதவி கலெக்டர் பார்வையிட்டார்
இதைத்தொடர்ந்து பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் பிரபாகர் வெண்டாக்கோட்டை அணையை பார்வையிட்டார். அப்போது அங்கு வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர்கள் பக்கிரிசாமி, கலியபெருமாள், பட்டுக்கோட்டை நகர செயலாளர் விஜயன் ஆகியோர் அணையை அகலமாக விரிவுபடுத்தி உயர்த்தி கட்டி நீரை அதிகமாக சேமிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கம் அளித்தனர்.
இந்த அணையின் இரு பக்கமும் உள்ள வாய்க்கால்களின் மூலம் கடைமடை பகுதியில் கோடைகாலத்தில் ஏரி, குளங்களில் தண்ணீர் சேமித்து விவசாயம் செய்ய ஏதுவாக அமையும் என்றும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். இது பற்றி உதவி கலெக்டர் பிரபாகர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.