காலதாமதமாக தொடங்கிய சம்பா சாகுபடி யூரியா தட்டுப்பாட்டால் விவசாயிகள் தவிப்பு


காலதாமதமாக தொடங்கிய சம்பா சாகுபடி   யூரியா தட்டுப்பாட்டால் விவசாயிகள் தவிப்பு
x
தினத்தந்தி 16 Dec 2022 7:00 PM GMT (Updated: 16 Dec 2022 7:00 PM GMT)

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிகளில் காலதாமதமாக செய்த சம்பா சாகுபடிக்கு தேவையான யூரியாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிகளில் காலதாமதமாக செய்த சம்பா சாகுபடிக்கு தேவையான யூரியாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.

மேட்டூர் அணை திறப்பு

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் குறுவை, சம்பா, தாளடி சாகுபடி பணிகளுக்காக மேட்டூர் அணை ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி திறந்து விடப்படுவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு முன் கூட்டியே அதாவது மே மாதம் இறுதியில் அணை திறக்கப்பட்டது. ஜூன் முதல் வாரத்தில் கல்லணை டெல்டா பாசன சாகுபடிக்காக திறக்கப்பட்டது. கல்லணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் பில்லங்குழி என்ற இடத்தில் நாகுடி பாசன வாய்க்கால் என ஒரு பிரிவாகவும் கடைமடை பகுதியான சேதுபாவாசத்திரம் மற்றும் புதுப்பட்டினம் என ஒரு பிரிவாகவும் 2 பிரிவுகளாக பிரிக்கப்படுவது வழக்கம்.

வாய்க்கால்கள்

இதில் நாகுடி பாசன வாய்க்காலில் முறை வைக்காமலும் சேதுபாவாசத்திரம் மற்றும் புதுப்பட்டினம் வாய்க்கால்களில் முறை வைத்தும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் இருந்தும் கடைமடை பகுதிக்கு 5 நாட்கள் வீதம் தண்ணீர் முறை வைத்து வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் வாய்க்கால்கள் அதிக கொள்ளளவு தண்ணீரை தாங்கும் அளவிற்கு இல்லை என கூறப்படுகிறது.

தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதால் கடைமடை பகுதி விவசாயிகள் நெல் சாகுபடியில் நாட்டமில்லாமல் இருந்து வருகின்றனர்.

தாமதமாக தொடங்கிய சாகுபடி

இந்த ஆண்டு கடைமடை பகுதி விவசாயிகள் ஏற்கனவே 60 சதவீதம் பகுதிகளில் நேரடி விதைப்பு செய்துள்ளனர். தற்போது நேரடி விதைப்பு செய்த பயிர்கள் 60 நாள் பயிராக உள்ளது. மீதமுள்ள 40 சதவீதம் பகுதிகளில் காலதாமதமாக கடந்த மாதம்தான் விவசாயிகள் பரவலாக சம்பா சாகுபடி செய்துள்ளனர்.

இந்த பயிர்கள் அனைத்தும் தற்போது யூரியா இடும் தருவாயில் உள்ளது. அதே சமயம் யூரியா இருப்பு இல்லை எனவும், யூரியா கிடைத்தாலும் நானோ யூரியா கரைசல் கட்டாயம் வாங்கினால்தான் யூரியா கொடுப்பதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

கலெக்டர் நடவடிக்கை

இதனால் காலதாமதமாக செய்த சம்பா சாகுபடி பயிர்களுக்கு யூரியா கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டு விவசாயிகள் தவித்து வருகிறார்கள். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் உர வினியோகம் செய்ய மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.


Next Story