திருவாரூர் மாவட்டத்தில், பருவம் தவறி கொட்டித்தீர்த்தது:மகசூலுக்கு பதில் கண்ணீரை வரவழைத்த மழை


திருவாரூர் மாவட்டத்தில், பருவம் தவறி கொட்டித்தீர்த்தது:மகசூலுக்கு பதில் கண்ணீரை வரவழைத்த மழை
x
தினத்தந்தி 5 Feb 2023 1:00 AM IST (Updated: 5 Feb 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் பருவம் தவறி மழை கொட்டித்தீர்த்தது. இந்த மழை மகசூலுக்கு பதில் கண்ணீரை வரவழைத்து இருப்பதாக வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள், ஈரப்பதத்தை கணக்கிடாமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் பருவம் தவறி மழை கொட்டித்தீர்த்தது. இந்த மழை மகசூலுக்கு பதில் கண்ணீரை வரவழைத்து இருப்பதாக வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள், ஈரப்பதத்தை கணக்கிடாமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

நீரில் மூழ்கின

ஆண்டுக்கு 3 போகம் விளையும் டெல்டா மாவட்டங்களில் விவசாய பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். ஆனால் கடந்த ஆண்டு (2022) முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் ஆர்வத்துடன் நெல் சாகுபடி பணியை தொடங்கினர்.

கடந்த ஆண்டு இறுதியில் பெய்த மழையால் திருவாரூர் உள்பட டெல்டா மாவட்டங்கள் முழுவதும் நெற்பயிர்கள் கடும் பாதிப்பை சந்தித்தன.

மழை பாதிப்பு

மழையில் இருந்து தப்பிய சம்பா நெற்பயிர்களை விவசாயிகள் உரம், பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து பாதுகாத்து அறுவடைக்கு ஆயத்தமாகி வந்தனர். முன்கூட்டியே சம்பா சாகுபடி செய்தவர்கள் அறுவடை செய்து முடித்து விட்டனர்.

காலம் தாழ்த்தி சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் திருவாரூர் மாவட்ட முழுவதும் கடந்த சில நாட்களாக மழை கொட்டித்தீர்த்ததால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மேலும் வயல் முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளது.

உலர்த்தும் பணி

இதனால் விவசாயிகள் அறுவடை பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகிறார்கள். அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்காக வைத்திருந்த நெல்மணிகளையும் மழை விட்டு வைக்கவில்லை. மழையில் நனைந்த நெல்மணிகளை விவசாயிகள் உலர்த்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் மற்றும் நேற்று வெயில் அடித்ததால் விவசாயிகள் நெல்மணிகளை சாலையில் கொட்டி உலர வைத்தனர். மழையில் நெல்மணிகள் நனைந்ததால் அதன் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. மேலும் நனைந்த நெல்மணிகள் முளைக்க தொடங்கி விட்டன.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மழைக்கு முன்னதாகவே நாங்கள் அறுவடை செய்து விட்டோம். கொள்முதல் நிலையம் கொண்டு செல்வதற்காக மூட்டைகளை அடுக்கி வைத்திருந்த நிலையில் நெல்மணிகள் நனைந்து விட்டன. இதனால் அவை முளைக்க தொடங்கி விட்டன.

ஈரப்பதத்தை கணக்கிடாமல்...

மேலும் வயலில் தேங்கியுள்ள நீரால் சாய்ந்துள்ள நெற்பயிர்கள் முளைத்து விட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும். சாய்துள்ள நெற்பயிர்களை அறுவடை எந்திரம் கொண்டு அறுவடை செய்ய முடியாது. அவ்வாறு அறுவடை செய்தாலும் மகசூல் குறைந்து விடும். 16 சதவீதம் வரை ஈரப்பதம் கொண்ட நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது அறுவடை நேரத்தில் மழை பெய்து இருப்பதால் ஈரப்பதத்தை கணக்கிடாமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் ஒரு நாளைக்கு 400 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. அதனை 1000 மூட்டையாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர்.

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர் அருகே உள்ள குலமாணிக்கம் கிராம பகுதியில் 360 ஏக்கரில் விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை மேற்கொண்டனர். தற்போது, நெற்பயிர்கள் நன்றாக வளர்ச்சி அடைந்து, அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்த நிலையில் மழை பெய்ததால் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் வயலில் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியது.

அறுவடை முடிந்து மகசூல் கிடைக்க வேண்டிய நேரத்தில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

மகசூல் இழப்பு

இதுகுறித்து குலமாணிக்கம் பகுதியை சேர்ந்த விவசாயி அரசு கூறுகையில், கடந்த ஆண்டு குறுவை அறுவடையின் போது திடீரென ்மழை பெய்து, பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. நெல்லில் ஈரப்பதம் அதிகரித்து இருப்பதால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை ஈடு செய்யும் வகையில் நெல்லின் ஈரப்பதத்தை கணக்கிடாமல் கொள்முதல் செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பருவம் தவறி மழை

விவசாயி தமிழன்பன்:-

பருவம் தவறி மழை பெய்வதால் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து மகசூல் பாதிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு குறுவை அறுடை நேரத்திலும் இந்த ஆண்டு சம்பா அறுவடை நேரத்தில் மழை ஏற்படுத்திய சேதாரம் அதிகம். தேவையான நேரத்தில் மழை பெய்வதில்லை. தண்ணீரே தேவைப்படாத அறுவடை நேரத்தில் மழை பெய்ததால், பல நாள் உழைப்பு வீணாகி உள்ளது. மகசூலை அள்ளித்தர வேண்டிய மழை, கண்ணீரை வரவழைத்துள்ளது. தண்ணீரில் மூழ்கிய நெற்கதிர்கள் மீண்டும் முளைக்க தொடங்கி விட்டன. மழையால் சம்பா சாகுபடியிலும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அரசு உரிய இழப்பீடு வழங்கவும், ஈரப்பதத்தை கணக்கில் கொள்ளாமல் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.


Next Story