வடிகால்களில் ஆகாயத்தாமரைகளை அகற்றி தூர்வார வேண்டும்
வடிகால்களில் ஆகாயத்தாமரைகளை அகற்றி தூர்வார வேண்டும்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் வட்டார அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கோட்டாட்சியர் (பொறுப்பு) மதியழகன் தலைமை தாங்கினார். தாசில்தார் ஜெயசீலன், தனித்துறை தாசில்தார் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் குழந்தைவேல், வீரப்பன், அறிவழகன், அகிலன், கருப்பம்புலம் முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர் மணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது வடிகால்களில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்றி தூர்வார வேண்டும். விவசாயிகளின் நலன்கருதி அரசின் காப்பீடு திட்டம் குறித்து விளம்பரப்படுத்த வேண்டும். இறவை பாசன திட்டம் மற்றும் பாசன வடிகால் பகுதிகளை தூர்வாரி சீரமைக்க வேண்டும். ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட துறையினர் மூலம் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் உறுதி அளித்தார்.