வாய்க்காலில் மதகு அமைக்க வேண்டும்
தஞ்சை அருகே வாய்க்காலில் மதகு அமைக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.
தஞ்சை அருகே வாய்க்காலில் மதகு அமைக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.
மதகு
தஞ்சையை அடுத்த பூதலூர் அருகே உள்ள கங்கைசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சிலர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், வெண்ணாறு கோட்டம் பூதலூரில் ஆனந்த காவிரியின் கிளையான புலியடி வாய்க்காலின் மதகு கடந்த ஆண்டு காணாமல் போய்விட்டது. இதனால் விவசாயிகள் அறுவடை நேரத்தில் கடும் அவதி அடைந்தனர். எனவே மேற்படி வாய்க்காலில் மீண்டும் மதகு அமைத்து தர வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
வடிகால் வாரி
பூதலூர் தாலுகா சொரக்குடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் அளித்துள்ள மனுவில், எங்கள் கிராமத்தில் சுமார் 700 ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களில் நெல் சாகுபடி செய்து வருகிறோம். வெண்டையம்பட்டி வருவாய் கிராமத்தில் ஊமத்தன் ஏரி உள்ளது. இந்த ஏரியில் வடிகால் வாரியானது தூர்ந்து போய் புதர் மண்டி உள்ளது. இதனால் தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது. மழை காலங்களில் தண்ணீர் வடிய வழியில்லாத காரணத்தினால் வயலுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் மூழ்கி விடுகின்றன. எனவே வடிகால் வாரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
வாய்க்கால்
தஞ்சையை அடுத்த களிமேடு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சிலர் அளித்த மனுவில், களிமேடு பகுதியில் உள்ள கல்லணை கால்வாய் வாய்க்கால் கடந்த 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக தண்ணீர் வடியாமல் இருப்பதால் நெற்பயிர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறது. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் வாய்க்காலை தூர்வாரி கொடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேற்படிப்புக்கு உதவித்தொகை
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வைராக்கிய தோப்பு பகுதியை சேர்ந்த மூதாட்டி அன்னபூரணி அளித்த மனுவில், எனது மகன், மருமகள் ஆகியோர் இறந்துவிட்டனர். நான் கூலிவேலை செய்து வருகிறேன். தினமும் வரும் வருமானத்தை வைத்து எங்களால் வேறு செலவு எதுவும் செய்ய முடியவில்லை. எனக்கு மூன்று பேத்திகள் உள்ளனர். இவர்களில் 2 பேர் பிளஸ்-2 முடித்துள்ளனர். எனவே அவர்கள் கல்லூரியில் சேர்ந்து மேற்படிப்பு படிக்க உதவித்தொகை வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.