மேட்டூரில் இருந்து வரும் தண்ணீரை வெலிங்டன் ஏரிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்


மேட்டூரில் இருந்து வரும் தண்ணீரை    வெலிங்டன் ஏரிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்    குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
x

மேட்டூரில் இருந்து வரும் தண்ணீரை வெலிங்டன் ஏரிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என கடலூரில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

கடலூர்

விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாதந்தோறும் 3 அல்லது 4-வது வாரங்களில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் தொடர்பான புகார் மனுக்களை பெற்றார்.

தொடர்ந்து அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அந்தந்த துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினர்.

வெலிங்டன் ஏரிக்கு...

அப்போது மேல்புளியங்குடி விவசாயி செல்வராசு கூறுகையில், மேட்டூரில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வீணாக கடலில் கலக்கிறது. இதை தடுக்க திருச்சி மாவட்டம் புல்லம்பாடி வழியாக கால்வாய் வெட்டி தொழுதூர் அணைக்கட்டு வெள்ளாற்றில் விட வேண்டும். அங்கிருந்து வெலிங்டன் ஏரிக்கு தண்ணீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான விளை நிலங்கள் பாசன வசதி பெறும். எனவே மேற்கண்ட கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றார்.

மின்சார இணைப்பு...

காவாலக்குடி முருகானந்தம் கூறுகையில், குண்டுபண்டிதன் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும். ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் முதல்-அமைச்சா் அறிவித்த இலவச மின்சார இணைப்பு பெரும்பாலான விவசாயிகளுக்கு இதுவரையில் கிடைக்கவில்லை. விவசாயிகளுக்கான உதவித் தொகை புதிதாக நிலம் வாங்கியவர்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம், அனைத்து கோரிக்கைகள் தொடர்பாகவும் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். கூட்டத்தில் வேளாண் துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய் துறையினர் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story