விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்


விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
x

கொள்முதல் நிலையங்களில் ஒரு நாளைக்கு 1,500 மூட்டை நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் லலிதா தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

அன்பழகன்(பொதுச் செயலாளர், டெல்டா பாசனதாரர் சங்கம்): அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு நாளைக்கு 800 நெல் மூட்டைகள் அளவிற்கு கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருவதால் ஒரு நாளைக்கு 1,500 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதே கோரிக்கையை விவசாயிகள் சிலரும் வலியுறுத்தினர்.

முருகன் (கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர்): மே மாதமே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டும் மணல்மேடு பகுதியில் உள்ள பட்டவர்த்தி வாய்க்கால், ஓடையாறுக்கு இதுவரை தண்ணீர் வரவில்லை.

உரத்தட்டுப்பாடு

விவசாயி பாண்டுரங்கன்: கூட்டுறவு சங்கங்களில் உரங்கள் கிடைக்காததால் தனியார் நிறுவனங்களில் அதிக விலைக்கு உரங்கள் விற்கப்படுகிறது. ஆகவே, தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேட்டங்குடி சீனிவாசன்: கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டதால் நாதல்படுகை, முதலைமேடு போன்ற கிராமங்களில் பயிரிடப்பட்ட நெல், கம்பு, சோளம் உள்ளிட்ட அனைத்து பயிர்களும் நீரில் மூழ்கி சேதம் அடைந்து விட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

ராஜசேகர்: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மோட்டா ரக நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளிடம் பணம் கேட்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மழையால் சேதம்

கோபிகணேசன் (காவிரி டெல்டா பாசன தரம் முன்னேற்ற சங்கம்):

இந்த ஆண்டு குறுவை அறுவடையின் போது தொடர்ச்சியாக பெய்த மழையின் காரணமாக 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் சேதமடைந்தன. ஆகவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டிற்கான சம்பா பயிர் காப்பீடு தொகையையும் வழங்க வேண்டும்.

கோதண்டராமன் (புதுமண்ணியாறு பாசன சங்க தலைவர்): பஸ் நிலையத்திலிருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு ஷேர் ஆட்டோக்கள் இயக்க வேண்டும்.

இதேபோல விவசாயிகள் பலர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை இணை இயக்குனர் முருகண்ணன், வேளாண் இணை இயக்குனர் சேகர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story