நாமக்கல் மாவட்டத்தில்கள்ளச்சந்தையில் மது, லாட்டரி சீட்டுகள் விற்பனைகுறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார்


நாமக்கல் மாவட்டத்தில்கள்ளச்சந்தையில் மது, லாட்டரி சீட்டுகள் விற்பனைகுறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
x
தினத்தந்தி 30 Jun 2023 7:00 PM GMT (Updated: 30 Jun 2023 7:00 PM GMT)
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கள்ளச்சந்தையில் மது, லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் டாக்டர் உமா தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஈஸ்வரன் எம்.எல்.ஏ., விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் நாட்டு சர்க்கரை தயாரிப்பிற்கு அஸ்கா சர்க்கரை பயன்படுத்தப்படுவதாகவும், அதனால் கரும்பு விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். எனவே இத்தகைய கலப்படத்தை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கேட்டு கொண்டனர்.

மது, லாட்டரி விற்பனை

கூட்டத்தில் பேசிய விவசாயி ஒருவர், மோகனூர் காவிரி ஆற்று பகுதியான ஒருவந்தூரில் சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதாக புகார் கூறினார். மேலும் அதற்காக ஆற்றில் நீண்ட தூரம் பாதை அமைக்கப்பட்டு உள்ளதாகவும், இதுகுறித்து அதிகாரிகளுக்கு புகைப்பட ஆதாரங்களோடு புகார் அளித்தால், அவ்வாறு ஏதுமில்லை என பதில் தருவதாகவும் வேதனையுடன் தெரிவித்தார்.

முன்னதாக விவசாயிகள் சிலர் மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் மது மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனை ஜோராக நடைபெறுவதாக புகார் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து ஈஸ்வரன் எம்.எல்.ஏ. பேசுகையில், நாமக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் கள்ளச்சந்தையில் மது மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாகவும், இது போலீசாருக்கு தெரியாமல் நடைபெற வாய்ப்பு இல்லை என குற்றம்சாட்டினர். எனவே போலீசார் தனி கவனம் செலுத்தி கள்ளச்சந்தையில் மது விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

உரிய நடவடிக்கை

அதேபோல் மோகனூர் அருகே சிப்காட் அமைக்கும் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும், தூசூர் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். காவிரி ஆற்றில் சாயக்கழிவுநீர் கலப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினார்கள்.

இதற்கு பதில் அளித்து பேசிய கலெக்டர் உமா, மணல் அள்ளும் புகார் தொடர்பாக ஆற்று பகுதியில் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளை பாதிக்கும் வகையில் எந்த திட்டமும் செயல்படுத்தப்படாது. கள்ளச்சந்தையில் மது, லாட்டரி சீட்டுகள் விற்பனையை தடுக்க போலீசாரின் கண்காணிப்பை தீவிரப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் மல்லிகா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வகுமரன், வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி, நாமக்கல் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்


Next Story