பரவலான மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி


பரவலான மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
x

மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

விருதுநகர்

மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கனமழை

ராஜபாளையத்தில் பரவலாக கன மழை பெய்தது. கனமழையானது நகர் மட்டுமின்றி ராஜபாளையத்தில் நேற்று மழை பெய்தது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சாஸ்தா கோவில் ஆறு, அய்யனார் கோவில் ஆற்றில் தற்போது தண்ணீர் வர தொடங்கி உள்ளது. இதனை தொடர்ந்து ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் மூலம் வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

அதேபோல குடிநீர் தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நீர்த்தேக்கம் நிரம்பியதால் நிலத்தடி நீர்மட்டமும் உயர்வதற்கான வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கூறினர். தென்காசி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காந்தி சிலை ரவுண்டானா, பழைய பஸ் நிலையம், காந்தி கலை மன்றம் ஆகிய இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது.

அரசு மகப்பேறு மருத்துவமனை, காந்தி கலை மன்றம் ஆகிய பகுதிகளில் உள்ள சாலை சேறும், சகதியுமாக மாறியது. அதேபோல சத்திரப்பட்டி, தளவாய்புரம், செட்டியார்பட்டி, முகவூர், சேத்தூர், தேவதானம், சொக்கநாதன்புத்தூர், புத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.

விவசாயிகள் மகிழ்ச்சி

வத்திராயிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய சாரல் மலையானது நேற்று காலை வரை நீடித்தது. வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் அமைந்துள்ள பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணை பகுதிகளிலும் மழை பெய்தது.

இந்த அணைகளில் இருந்து 40 கண்மாய்களுக்கு தண்ணீர் சென்று கொண்டு இருக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். கண்மாய்களில் 70 முதல் 90 சதவீதம் வரை தண்ணீர் இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

குடியிருப்புகளில் தேங்கிய நீர்

வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, மண்குண்டாம்பட்டி, மடத்துப்பட்டி, துலுக்கன்குறிச்சி, கங்கரகோட்டை, செவல்பட்டி, முத்தாண்டியாபுரம், இ.எல் ரெட்டியாபட்டி, அன்பின்நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை 3 மணி முதல் தொடர்ந்து காலை 9 மணி வரை மழை பெய்தது. கீழ செல்லையாபுரம் கிழக்குத்தெரு, கணஞ்சம்பட்டி கீழத்தெருவிலும் மழைநீர் செல்லும் ஓடை தூர்வாரப்படாததால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

இதனால் வீட்டிற்குள் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இந்த மழை விவசாயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.


Related Tags :
Next Story