நிலங்களுக்கு உரிய இழப்பீடு கேட்டு விவசாயிகள் பட்டினி போராட்டம்
விழுப்புரம்- நாகை 4 வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு கேட்டு விவசாயிகள் பட்டினி போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையே தற்போது 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக நிலம் கையகப்படுத்திய விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்தும், விவசாயிகளின் வாழ்வாதார பாதிப்பை கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்தும், வெளிச்சந்தை மதிப்பை நிர்ணயம் செய்யக்கோரியும் நேற்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் தொடர் பட்டினி போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் குமார், மாவட்ட செயலாளர் அய்யனார், மாவட்ட தலைவர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அற்பிசம்பாளையம், சாலையாம்பாளையம், ஓட்டேரிப்பாளையம், சுந்தரிப்பாளையம், நன்னாட்டாம்பாளையம், ஆனாங்கூர், சாமிப்பேட்டை, கொளத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இழப்பீடு வழங்குவதில் பாகுபாடு
இப்போராட்டத்தின்போது அய்யாக்கண்ணு, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளாகியும் விவசாயிகள் தொடர்ந்து அடிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். ஆசிரியர்கள், எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் உயர்ந்துவிட்டது. ஆனால் நெல், கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தவில்லை. தேசிய நெடுஞ்சாலைப்பணிக்கு கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் பாகுபாடு உள்ளது. நாகை மாவட்டத்தில் சதுரஅடிக்கு ரூ.2 ஆயிரம் வழங்குகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் சதுரஅடிக்கு ரூ.2 ஆயிரம் கொடுக்கிறார்கள். ஆனால் அற்பிசம்பாளையம், சாலையாம்பாளையம்,
உள்ளிட்ட கிராமங்களில் மட்டும் சதுரஅடிக்கு வெறும் ரூ.200 இழப்பீடு வழங்குகிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம்? இழப்பீடு வழங்குவதில் பாகுபாடு இருக்கக்கூடாது.
போராட்டம் தொடரும்
தேர்தல் சமயத்தில் மட்டும் விவசாயிகள் இந்த நாட்டின் முதுகெலும்பு என்கிறார்கள். ஆனால் தேர்தல் முடிந்ததும் விவசாயிகளை ஆட்சியாளர்கள் மறந்துவிடுகின்றனர். எனவே 4 வழிச்சாலை பணிக்காக நிலம் கையகப்படுத்தியதற்கு உரிய இழப்பீடு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். மாவட்ட கலெக்டர் நேரில் வந்து எங்களுக்கு உறுதியளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே விவசாய சங்கத்தினர், மாவட்ட கலெக்டர் மோகனை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒரு மாத காலத்திற்குள் உரிய இழப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். இதனை ஏற்ற விவசாயிகள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.