நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட வேண்டும்


நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட வேண்டும்
x

ஊழல்-மோசடி இல்லாமல் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.

மதுரை

ஊழல்-மோசடி இல்லாமல் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.

160 நிலையங்கள்

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், வேளாண் இணை இயக்குநர் விவேகானந்தன் முன்னிலை வகித்தனர். கலெக்டர் அனிஷ் சேகர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அருண் பிரசாத், அரசு துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், நெல் அறுவடை பணிகள் நடைபெறும் பகுதிகளில் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். மோசடி-ஊழல் புகார்களுக்கு இடம் தராத வகையில் நெல்கொள்முதல் நிலையங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றனர். அதற்கு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அருண் பிரசாத் பதிலளித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:- மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் வருகிற மார்ச் மாதம் வரை 160 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். 5 கி.மீட்டர் தொலைவுக்கு ஒரு நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்பது விதி. ஆனாலும் மதுரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கூட மற்றொரு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

சுமை கட்டணம்

கடந்த ஆண்டில் தனியார் இடங்களில் ஒரு சில நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டதால், முறைகேடு புகார்கள் எழுந்தன. இந்தாண்டில் தனியார் இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க போவதில்லை. நெல் கொள்முதல் மையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் எந்த வித புகார்களுக்கு ஆளாகாமால், விவசாயிகளிடம் இருந்து கையூட்டு பெறாமல் பணியாற்ற வேண்டும் என்று கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு மூட்டை நெல்லை கொள்முதல் செய்து, அதனை இயக்கம் செய்ய ரூ.10 கூலியாக அரசு நிர்ணயித்துள்ளது. இந்த தொகையை மட்டுமே நுகர்பொருள் வாணிப கழகத்தால் வழங்க முடியும். சுமை பணி தொழிலாளர்கள் கோரும் கூடுதல் தொகையை விவசாயிகள் ஈடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது கூடுதல் தொகையை விவசாயிகள் ஈடு செய்ய வேண்டும் என்பது தவறான வழிகாட்டல். சுமை பணி மேற்கொள்ளும் தொழிலாளர்கள் ஒரு மூடைக்கு ரூ.20 கூலி கேட்கின்றனர். இந்த தொகையை அரசே வழங்க வேண்டும் என்றனர்.

வடமாநிலத்தவர்கள்

அதற்கு பதிலளித்த அதிகாரிகள், முந்தைய காலங்களில் ஒரு மூட்டைக்கான சுமை கூலி ரூ.3.24 மட்டுமே. தற்போது, அரசு இந்த கூலியை ரூ.10-ஆக உயர்த்தியுள்ளது. நாள் ஒன்றுக்கு ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் 1000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. கூடுதல் தொகை கோரும் சுமை பணி தொழிலாளர்களின் தேவையை நுகர்பொருள் வாணிப கழகம் பூர்த்தி செய்ய இயலாது. விவசாயிகள், தங்கள் பகுதியில் ஒரு மூட்டைக்கு ரூ.10 கூலி பெறும் கூலி தொழிலாளர்களை கொள்முதல் பணிக்கு அளித்தால், அவர்களுக்கு பணி வழங்க தயாராக உள்ளோம். இல்லையெனில், அரசு நிர்ணயித்த கூலியில் பணியாற்ற வடமாநிலத்தவரை பயன்படுத்த இயலும் என்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சில விவசாயிகளிடம், ஒரு சில விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, கலெக்டர் அனிஷ்சேகர் தலையிட்டு, இதுகுறித்து அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்றார்.


Next Story