சோளம் சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்


சோளம் சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்
x

கால்நடை தீவனத்திற்காக சோளம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

விருதுநகர்

ராஜபாளையம்,

கால்நடை தீவனத்திற்காக சோளம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஒட்டு ரக சோளம்

ராஜபாளையம் அருகே உள்ள கிராம பகுதிகளில் வீரிய ஒட்டு ரக சோளம் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். வீரிய ஒட்டு ரக சோளத்தில் 5 சதவீதம் வரை ஒட்டு ரகத்தையும், மீதி நாட்டு ரகமான சோளத்தையும் கொண்டு பயிரிட வேண்டும்.

சித்திரை பாட்டத்தில் விதைக்கப்படும் இந்த வீரிய ஒட்டு சோளம் 110 முதல் 120 நாட்கள் வரை அறுவடைக்கு தயாராகி விடும். அறுவடையின் போது நன்கு விலை போகும். குறைந்தது எக்டேர் ஒன்றுக்கு 4½ டன் சோளம் கிடைக்கும். நிலத்தை தரிசாக போடுவதை விடுத்து வீரிய ஒட்டு ரக சோளம் பயிரிட்டால் அதிக செலவு இல்லாமலும் நல்ல வருமானம் கிடைப்பதாக விவசாயிகள் கூறினர்.

கால்நடை தீவனம்

மேலும் இதுகுறித்து விவசாயி குமரேசன் கூறியதாவது:- கோடை காலத்தில் பயிரிடப்படும் வீரிய ஒட்டு ரக சோளம் சாகுபடியில் அதிக மகசூல் தரும் வகையில் 500 ஏக்கர் வரை பயிரிடுவார்கள். தெற்கு வெங்காநல்லூர், நக்க நேரி, தேசிகாபுரம், சிதம்பராபுரம், நல்லமநாயக்கன்பட்டி, ராமலிங்கபுரம், கலங்காபேரி, வடகரை, தென்கரை, சட்டி கிணறு, சிவலிங்காபுரம், வேப்பங்குளம், கம்மாபட்டி ஆகிய பகுதிகளில் பயிரிடப்படுகிறது.

இந்த ஒட்டு ரக சோளம் கோடைகாலத்தில் பயிரிடப்பட்டால் 5 மாதங்களில் அதிக விளைச்சல் இருக்கும். கால்நடை தீவனங்களுக்கு பயன்படும் ரகங்களில் இதுவும் ஒன்றாகும். கால்நடை தீவனத்திற்காக இதனை அதிக அளவில் சாகுபடி செய்கின்றனர்.

அதிக விளைச்சல்

மேலும் கிலோ 1-க்கு ரூ. 20 விதமும், ஒரு மூடைக்கு ரூ.2 ஆயிரம் வீதம் விவசாயிகளிடம் கால்நடை தீவன வியாபாரிகள் வாங்குவார்கள்.

இது கோடை காலத்தில் மட்டும் தான் கிணற்று பாசனம் மூலம் பயிரிடப்படும். விளைச்சலும் அதிகமாக இருக்கும். லாபமும் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story